போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் எக்ஸ்
தமிழ்நாடு

”மாநில உரிமைகளை கேட்கும்போது, தொழிலாளர் உரிமையை கண்டுகொள்ளாமல் இருக்கலாமா?” - சு. வெங்கடேசன் எம்.பி

"ஒன்றிய அரசிடமிருந்து மாநிலத்தின் உரிமையை பேசுகிற பொழுது கரம் கோர்த்து நிற்கிற கைகள், மாநில அரசிடமிருந்து தொழிலாளர்கள் உரிமையை கேட்கிற பொழுது கண்டு கொள்ளாமல் இருப்பது எந்த வகை நியாயம்" - எம்பி சு. வெங்கடேசன்

PT WEB

ஒன்றிய அரசிடமிருந்து மாநில உரிமையை கேட்கும் அரசு மாநில அரசிடமிருந்து தொழிலாளர்கள் உரிமையை கேட்கும்போது கண்டுகொள்ளாமல் இருப்பது எந்த வகை நியாயம் என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள், 24 மாத பணிஓய்வுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும், பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் மற்றும் நிறுத்திவைக்கப்பட்ட நிலுவைத்தொகைகளை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 29-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றர். இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சு. வெங்கடேசன்

சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய கல்வி நிதியை கொடுக்காமல் இருப்பதை கண்டித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் போராடி வருகிறோம். உடனடியாக அந்த நிதியை தமிழகத்திற்கு தர வேண்டும் எனக்கூறி எம்.பி. சசிகாந்த் செந்தில் உண்ணா நிலை போராட்டம் செய்த போது இந்தியா கூட்டணியில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களும் போய் சசிகாந்தை சந்தித்தனர். அவரது கோரிக்கைக்கு உடன்பாட்டை சொல்லி அவர் உடல் நலம் சார்ந்து போராட்டத்தை முடித்துக்கொள்ள அக்கறையோடு எடுத்து சொன்னார்கள். அவரும் தன்னுடைய போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

மாநில அரசுக்கு நியாயமா?

ஆனால், இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் 29 நாட்களாக தினசரி போராடிக் கொண்டிருக்கின்றனர். நாளை 30 ஆவது நாள் அவர்கள் போராட்டம் நடைபெற உள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து மாநிலத்தின் உரிமையை பேசுகிற பொழுது கரம் கோர்த்து நிற்கிற கைகள், மாநில அரசிடமிருந்து தொழிலாளர்கள் உரிமையை கேட்கிற பொழுது கண்டு கொள்ளாமல் இருப்பது எந்த வகை நியாயம் இந்த கேள்வியை நான் தமிழக அரசுக்கு எழுப்புகிறேன். 

தொடர்ந்து, 29 நாட்களாக போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் மாவட்டந் தோறும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது உழைப்புக்கான ஊதியத்தை கேட்டு, ஓய்வூதியத்தைக் கேட்டு, அரசு ஏற்கனவே ஒத்துக்கொண்ட ஒப்பந்தத்தை கேட்டு அதை நிறைவேற்ற போராடிக் கொண்டிருக்கிறார்கள்" என அந்த பதிவில் பேசியுள்ளார்.