மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

”மதுரை வடக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்கும்” - மாணிக்கம் தாகூர்

”மதுரை வடக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்கும்; அதில் எந்தவித சந்தேகமும் இல்லை”என அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

”மதுரை வடக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்கும்; அதில் எந்தவித சந்தேகமும் இல்லை”என அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் முன்பைவிட அழுத்தமாக முன்வைத்த நிலையில், திமுகவுடனான அதன் கூட்டணி என்னவாகும் என்ற கேள்வி எழுந்திருந்தது. இது ஒருபுறமிருக்க தவெகவுடன் கூட்டணி வைப்பதற்கு இசைவாகவும் கட்சியில் ஒரு தரப்பினர் பேசிவந்தனர். காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் வைத்த இந்த கருத்துக்கு திமுக தரப்பில் மாற்றுக் கருத்துகள் வந்தன. இதனால் மாற்றிமாற்றி இருதரப்பிலும் சங்கடமான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஒருகட்டத்தில் பதிலடி என்று சொல்லுமளவுக்கு இரு தரப்பிலும் சங்கடமான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இதனால், இந்த கூட்டணி நீடிக்குமா அல்லது காங்கிரஸ் அணி மாறப் போகிறதா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்தது. காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மையானோர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும், கூடுதல் தொகுதி என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்ததாக கூறப்பட்டது.

கனிமொழி, ராகுல்

இந்த சூழலில், டிசம்பர் மாதமே தொகுதிப் பங்கீடு தொடர்பாக தாங்கள் பேசத் தொடங்கியும், இதுவரையில் திமுக தரப்பில் உறுதியான பதில் இல்லை என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளார் கிரீஷ் சோடங்கர் வெளிப்படையாக பேட்டி கொடுத்தார். அதற்கு மறுநாளே திமுக துணை பொதுச்செயலரும், திமுகவின் டெல்லி முகமாக முன்னிறுத்தப்படுபவருமான கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. இந்த நிலையில், ”மதுரை வடக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்கும்; அதில் எந்தவித சந்தேகமும் இல்லை”என அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர், “நாடாளுமன்ற குழுவின் தலைவர் கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார் அவர்களுக்கான சந்திப்பு குறித்து அவர்கள் வெளியில் எதுவும் சொல்லவில்லை அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அப்போதுதான் நமக்குத் தெரியும். ஆனால், ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமை நியமித்த குழு பேச்சுவார்த்தை நடத்தும். மதுரை வடக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சி கோரும்; அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த அளவில் மதுரை வடக்குத் தொகுதியைக் கேட்டுப் பெற வேண்டும் என்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரை சந்தித்துப் பேசினேன். எங்களைப் பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியின் தன்மானம் மிக முக்கியமானது” எனத் தெரிவித்தார்.

மாணிக்கம் தாகூர்

இதற்குப் பதிலளித்துள்ள பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, “தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு ஸ்டாலின்தான் தலைமை தாங்குகிறார். எங்கள் தலைமையிலான கூட்டணியில் எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை இதை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன” எனப் பதிலளித்தார்.