கரூர் எம்.பி. ஜோதிமணி, விஜய் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல, 2010-ல் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைய வந்தவர் என தெரிவித்தார். கூட்டணி குறித்து பேச இன்னும் காலம் இருக்கிறது என்றும், சமூக வலைதளங்களை வைத்து முடிவெடுக்க முடியாது என்றும் கூறினார்.
கரூர் நாடாளுமன்ற எம்.பி ஜோதிமணி இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ராகுல்காந்தி விஜயிடம் பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல, விஜய் கடந்த 2010-ல் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைய வந்தவர், அன்று சில காரணங்களால் அது நடக்கவில்லை, அவர் எங்களுக்கு தெரியாத நபர் அல்ல.
கரூர் துயர சம்பவத்தில் தலைவர்கள் அனைவரும் பேசியது போல், ராகுல்காந்தியும் பேசினார். சமூக வலைதளங்களில் வருவதை வைத்து கூட்டணிகளை முடிவு செய்ய இயலாது. நாங்கள் இப்போதும் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அதனால் கூட்டணி குறித்து பேச இன்னும் காலம் இருக்கிறது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக செயல்படுத்தி வருகிறது. 12 மாநிலங்களில் புது விண்ணப்பம் கொடுத்து வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்கின்றனர். இது குடியுரிமை திட்டம். பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் மட்டும் திருத்தம் செய்யாமல், குடிமக்கள் பதிவேட்டில் திருத்தம் செய்கிறார்கள். குடியுரிமையை சரி பார்க்கும் பணி தேர்தல் ஆணையத்திற்கு இல்லை, உள்துறைக்கு சொந்தமானது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, SIR வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, பாஜக ஆளாத தமிழ்நாடு, கேரளாவில் செயல்படுத்துவதன் நோக்கம் என்ன?. தேர்தல் ஆணையத்திற்கும், பாஜகவிற்கும் நம்மை பார்த்தால் ஏமாளி போல் தெரிகிறதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.