SIR வழக்கு | கதவை மூடிய உயர்நீதி மன்றம்... உச்ச நீதிமன்ற கதவை தட்டிய கேரள அரசு!
கேரள அரசு, உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன் SIR நடவடிக்கையை நிறுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது கேரள அரசு தற்போது, உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் SIR–ஐ தற்காலிகமாக நிறுத்துமா? அல்லது தேர்தல் ஆணையத்தின் பார்வையை ஏற்று செயல்முறையை தொடருமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும்.
கேரள அரசுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் இடையே Special Intensive Revision அதாவது SIR குறித்த பெரிய சட்ட விவாதம் உருவாகி உள்ளது. உள்ளாட்சி தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் இந்த SIR செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை வைத்து வந்தது. ஆனால் இந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்த பின்னர், இப்போது கேரள அரசு நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டியுள்ளது. காரணம்—SIR மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் ஒரே காலகட்டத்தில் நடைபெறுவது நிர்வாகத்தையும் பணியாளர்களின் ஒதுக்கீட்டையும் கடுமையாக பாதிக்கும் என்ற அரசின் நிலைப்பாடு.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்கள் டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான தயாரிப்புகளுக்கு ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் SIR நடவடிக்கையிலும் மிகப் பெரிய அளவில் பணியாளர்கள் தேவைப்படுவதாக கேரள அரசு தெரிவிக்கிறது. இதனால் தேர்தல் பணிகளில் குழப்பம், பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம் போன்ற முக்கிய செயல்பாடுகள் தாமதம், வாக்காளர்களின் உரிமை பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகலாம் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. "இந்த நேரத்தில் SIR நடத்த அவசரம் இல்லை" என்று அரசு தனது மனுவில் குறிப்பிடுகிறது.
ஆனால், தேர்தல் ஆணையம் SIR–யை தேசிய அளவில் ஒரே நேரத்தில் நடத்துவது அவசியம் என வலியுறுத்தி வருகிறது. மாநிலங்களுக்கு தனித்துவமாக விதிவிலக்கு வழங்கினால் தேர்தல் பட்டியல்களின் ஒரே மாதிரி தன்மை குலையும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. முன்பு உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் நீதிமன்றம், "SIR பற்றிய வழக்குகள் ஏற்கனவே சென்று கொண்டிருக்கின்றன… இதற்கிடையில் மாநில அரசின் மனுவை தனியாக விசாரிக்க முடியாது" என்று கூறி அந்த மனுவை நிராகரித்தது. இதன் பின்னரே கேரள அரசு உச்ச நீதிமன்றத்திற்கு மாறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், “உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்பாக இந்த SIR நடவடிக்கை இடம்பெறுவதால், பட்டியல் புதுப்பிப்பில் தவறுகள் நிகழலாம்… தவறான சேர்த்தல், நீக்கல் ஆகியவை தேர்தல் நீதியையும் பாதிக்கும் அபாயம் உண்டு” என கேரள அரசு எச்சரித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல், "SIR காரணமாக ஏற்கனவே ஓவர்லோடு ஆன நிர்வாக அமைப்பு உடைந்து போகும் நிலை உருவாகலாம்" எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற செயல்பாடுகள் தேர்தல் காலத்தில் நடைபெறுவது சரியா என்பதும் இந்த வழக்கின் மையப் பிரச்சினையாக உள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் SIR–ஐ தற்காலிகமாக நிறுத்துமா? அல்லது தேர்தல் ஆணையத்தின் பார்வையை ஏற்று செயல்முறையை தொடருமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும். இந்த வழக்கின் தீர்ப்பு கேரள மாநிலத்திற்கு மட்டுமல்ல… நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த முறைகளுக்கும் ஒரு முக்கிய தீர்ப்பாக அமையக்கூடும். மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படாத வகையிலும், தேர்தல் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கும் இந்த தீர்ப்பு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும், சட்ட நிபுணர்களும், பொதுமக்களும் ஆவலுடன் இதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

