கோவை சிறுமி கொலை வழக்கில், சிறுமியின் தாய் தனது குழந்தையின் உடலை தன்னிடம் சொல்லாமல் கணவர் குடும்பத்தினர் எரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இறப்பில் சந்தேகம் எழுந்தால் மீண்டும் ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார். தாம் மதுபோதையில் இருந்ததாக பரப்பப்படும் குற்றச்சாட்டை மறுத்த அவர், எந்த நிதியும் வேண்டாம், நீதிதான் வேண்டும் என வலியுறுத்தினார்.
கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் குளக்கரையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் கார்த்திக், மோகன்ராஜ் என்ற 2 பேரைப் பிடித்தனர்.
இரண்டு பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் 33 வயது இளைஞர் கார்த்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்று கொலை செய்தது வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கார்த்திக்கு உதவியதாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் கைதுசெய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து உறவினர்களின் நீண்ட நேர போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொலை செய்யப்பட்டுள்ளதாக கோவை மேற்குமண்டல ஐஜி உறுதிப்படுத்தினார்.
இந்தசூழலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிறுமியின் தாய், தன்னிடம் சொல்லாமலே குழந்தையின் உடலை எரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். மேலும் சிறுமியின் தாய் குற்றச்சம்பவத்தின் போது மதுபோதையில் இருந்ததால் தான் சிறுமியை தேடி காப்பாற்ற முடியவில்லை என்ற குற்றஞ்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், அக்கேள்வி குறித்தும் பதிலளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இறந்துபோன என் குழந்தையை போஸ்ட் மார்டம் பண்ண பிறகு என் கண்ணுல காட்டவே இல்லை.. எனக்கே தெரியாமல் பின் வாசல் வழியா உடலை ஆம்புலன்ஸில் அனுப்பி வச்சிட்டாங்க. என்னிடம் சொல்லாமலே கணவர் குடும்பத்தினர் எரித்துவிட்டார்கள். ஒருவேளை எரிக்காமல் புதைத்து இருந்தால் இறப்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தோண்டி எடுத்துப் பார்த்திருக்க முடியும். ஆனால், இப்போது எனக்கே தெரியாமல் எரிச்சுட்டாங்க, என்னுடைய கணவர் மற்றும் அவர்கள் உடன் இருந்தவர்கள் மீது நான் குற்றம் சொல்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் தான் குடித்திருந்தேனா என்ற கேள்விக்கு, நான் குடித்திருந்ததாக என்மீது அவதூறு பரப்பப்படுகிறது. தனக்கு எந்த நிதியும் வேண்டாம், நீதிதான் வேண்டும். குழந்தையைக் கொன்ற குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.