நெல்லை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 285 கொலைகள் நடந்திருப்பதாக ஆர்டிஐயில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் புதிய தலைமுறை செய்தியாளர் மருதுபாண்டி கேள்வி கேட்டிருந்த நிலையில், முழு தகவல்களும் வெளியாகியுள்ளன.
2020 முதல் 2024 வரை நெல்லை புறநகரில் 211 பேரும் நெல்லை மாநகரில் 74 பேரும் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஆர்டிஐயில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி 2023 - 2024 வரையிலான ஒரு வருடக் காலக்கட்டத்தில் மட்டும் 45 கொலைகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
நெல்லை மாநகர பகுதியில் சாதி ரீதியான கொலைகளும் நடந்துள்ளதாக மாநகர காவல் துறை விளக்கமளித்துள்ளது. குடும்பப் பிரச்னை, முன்விரோதம், சாதி பிரச்னை போன்றவற்றால் அதிக கொலைகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 சிறார்கள் மற்றும் 1045 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி கைதான 392 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் மட்டும் 27 நபர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.