Monsoon intensifies across various parts of Tamil Nadu ANI
தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி|எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? ஹேமச்சந்தர் கூறியது என்ன?

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் பருவமழை தீவிரமடைந்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.

Praveen Joshva L

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, அக்டோபர் 23 வரை தமிழ்நாட்டின் வடகடலோரம், தென்கடலோரம் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் முற்பகலில் மழை தொடங்கும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவின் கடலோரப் பகுதிகள் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளுக்கு அதிக மழைப்பொழிவைத் தரும் முக்கிய பருவக்காலமாக வடகிழக்கு பருவமழை திகழ்ந்து வருகிறது. நிலப்பகுதியில் இருந்து வங்கக்கடலை நோக்கி வீசும் வறண்ட வடகிழக்குக் காற்று, வங்கக்கடலில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்துக்கொண்டு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழையை கொடுக்கிறது.

அதோடு இந்த காலகட்டத்தில் வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள், தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயல்கள் மூலமும் தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் கனமழை பதிவாகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆண்டின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் சுமார் 48% முதல் 50% வரை இந்த வடகிழக்குப் பருவமழையின் மூலமே கிடைக்கிறது. இதனால் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் தமிழ்நாட்டுக்கு மிக முக்கியமான காலமாக திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பதிவானது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் 18-ஆம் தேதி வரையிலான காலத்தில் இயல்பை விட 14.5 மில்லி மீட்டர் மழை அதிகமாக பதிவானதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவில் இருந்தே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனிடையே தாய்லாந்து வளைகுடா மற்றும் மியான்மரில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நாளை காலைக்குள் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் இன்று முதல் அக்டோபர் 23-ம் தேதி வரை 3 நாட்களுக்கு பருவமழை தீவிரமடையும் என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். இதன் காரணமாக இன்று வடகடலோரம், தென் கடலோரத்தில் கன முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது, காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் முற்பகலில் உள் மாவட்டங்களிலும் மழை துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.