மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவின் நேர்மையற்ற தன்மை காரணமாகவே சம்பவம் நடந்ததாக குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி என்டிஏ ஆட்சிதான் என உறுதியளித்தார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறிவருகிறது. ஆளும் திமுக அவர்களின் கூட்டணியை பலப்படுத்தி வரும் நிலையில், மறுமுனையில் இருக்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவை வீழ்த்தும் வேலைகளை செய்துவருகிறது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மதுரையில் உள்ள மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது. அதிமுக, பாஜக, அன்புமணி தரப்பு பாமக, அமமுக தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபிறகு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மேடையில் திமுக அரசை விமர்சித்து பேசினார்.
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வெற்றிவேல், வெற்றிவேல், வெற்றிவேல் என்று உரையை தொடங்கிய மோடி, அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம், அம்மா மீனாட்சி-சுந்தரேஸ்வரரை வணங்குகிறேன். இது பாண்டியநாடு. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்தேன், தெய்வீகமாக இருந்தது. தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் மக்களுக்காக இறைவனிடம் வேண்டினேன்.
அப்போது தரிசனம் செய்தபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரி தற்கொலை செய்த பூரணசந்திரனை நினைத்து வருந்துகிறேன். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக என்ன செய்திருந்தாலும் உண்மை கண்டிப்பாக வெளிவரும். திமுகவின் நேர்மையற்ற தன்மை காரணமாகவே இந்த சம்பவம் நடந்தது” என்று கூறினார்.
மேலும், தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. மதுரை மக்கள் எம்ஜிஆர் உடன் நின்றனர், அதனால் மதுரையை திமுகவுக்கு பிடிக்கவில்லை. 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக ஊழல் செய்து, குடும்ப ஆட்சியை நடத்தி, மக்களின் நம்பிக்கையை பாழாக்கினர். தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி என்டிஏ ஆட்சிதான்.
தமிழ்நாட்டின் பெண்கள் பெரும் பிரச்னையில் சிக்கியிருக்கின்றனர், குற்றங்கள் அதிகரித்துள்ளன. மதுவால் தங்கள் குடும்பம் அழிந்து கொண்டிருப்பதை கண்டு பெண்கள் கலங்குகின்றனர். NDA கூட்டணி ஆட்சியில் தாய், சகோதரிகள், மகள்களுக்கு பாதுகாப்பை நான் உறுதியளிக்கிறேன். நம் ஆட்சி அமைந்ததும் போதைப்பொருள் மாஃபியாக்கள் சிறையில் அடைக்கப்படுவர்” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிலேயே சிலர் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவுகள் கற்பனை கோட்டைகளாக, கானல் நீராக மாறிவிடும். திமுக வெளியேற வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர், அதை உங்கள் கண்களில் பார்க்கிறேன்.
என்னிடமும் என் தந்தை இடமும் பயமில்லை என்று திமுகவில் யாரோ ஒருவர் அண்மையில் பேசினார் என்று கேள்விபட்டேன். நான் தெளிவாக ஒன்றை கூறிக்கொள்கிறேன் ஜனநாயகத்தில் யாரும் யாருக்கும் பயப்பட தேவையில்லை, அஞ்சத்தேவையில்லை. அதனால் யாராவது என்னிடம் பயமில்லை என்று கூறினால், அவர்கள் என்னை விமர்சிக்கவில்லை. மாறாக ஜனநாயக நன்மதிப்புகள், விழுமியங்களிடம் எனக்கிருக்கும் அர்ப்பணிப்பை உள்ளபடியே அவர்கள் பாராட்டுகிறார்கள் என்று தான் அர்த்தம். பாவம் தெரியாத்தனமாக அவர்கள் எனக்கு பாராட்டு பத்திரம் வழங்கிவிட்டார்கள் என உதயநிதி ஸ்டாலின் பேச்சை விமர்சித்து பேசினார்.