பாமக எம்எல்ஏ அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30&இன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (02.07.2025) புதன்கிழமை முதல் இரா. அருள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாகவே பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதன்காரணமாக பாமக நிர்வாகிகளும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் ராமதாஸ் தலைமையிலும், அன்புமணி தலைமையிலும் இருபிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில், குறிப்பாக எம்.எல்.ஏ அருள் அன்புமணிக்கு எதிரான விமர்சனக் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, எம்எல்ஏ அருளை, கட்சியின் இணைப்பொதுச் செயலாளராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். கூட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், கட்சியை நடத்தி வரும் தானே தலைவர் என்பதால் தனக்கே முழு அதிகாரம் உள்ளதாக கூறினார். தன்னுடன் இருப்பவர்களே தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இதனையடுத்து அருள் வகித்த சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் சரவணன் என்பரை புதிதாக நியமித்து அன்புமணி அறிக்கை வெளியிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அருள், “பாமகவின் நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் என்னை பாமகவின் இணைப் பொதுச்செயலாளராக நியமித்திருக்கிறார். கட்சியின் பொறுப்பாளர்களை நியமனம் செய்வதற்கோ நீக்குவதற்கோ மருத்துவர் ராமதாஸுக்கே அதிகாரம் இருக்கிறது. செயல்தலைவராக இருக்கக்கூடிய அன்புமணி ராமதாஸுக்கு இந்த அதிகாரம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று வெளியான அறிவிப்பு குறித்தும் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய அருள், “செயல் தலைவருக்கு நீக்க அதிகாரம் இல்லையே.. நிறுவனருக்கு மட்டுமே அந்த அதிகாரம் இருக்கிறது. ஒழுங்கு நடவடிக்கைக் குழு எல்லாம் அய்யாவின் (ராமதாஸ்) கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
25 ஆண்டுகள்.... அண்ணன் அன்புமணி வருகிறார் வருகிறார் என தொண்டை கிழிய கத்தியிருக்கிறேன். என் மகள் பிறந்து 28 நாள் கழித்துதான் அவளையே பார்த்தேன். அப்போது அச்சரப்பாக்கத்தில் இடைத்தேர்தல் நடந்தது. அதில் அன்புமணி பரப்புரை செய்தபோது, அந்த பரப்புரைக் குழுவின் தலைவராக செயல்பட்டிருக்கிறேன். அப்படி எல்லாம் செயல்பட்ட எனக்கு அன்புமணி கொடுத்த பரிசாக எடுத்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.