சாய் சுதர்சன் - கவுதம் கம்பீர்
சாய் சுதர்சன் - கவுதம் கம்பீர்web

’சாய் சுதர்சன் நம்முடைய எதிர்காலம்.. அவரை நீக்கியது அநீதி’ - கவுதம் கம்பீரை விளாசும் ரசிகர்கள்!

தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய சாய் சுதர்சன், அடுத்த போட்டியிலேயே நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.
Published on

முதல்தர கிரிக்கெட், கவுண்டி சாம்பியன்ஷிப் மற்றும் ஐபிஎல் என அனைத்துவகையான கிரிக்கெட்டிலும் ரன்களை மலைபோல் குவித்த தமிழக வீரர் சாய் சுதர்சன், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய சர்வதேச டெஸ்ட் அறிமுகத்தை பெற்றார்.

அங்கு அறிமுக இன்னிங்ஸிலேயே தவறான ஷாட் மூலம் 0 ரன்னில் வெளியேறிய சாய், இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் அடித்திருந்தபோது வெளியேறினார்.

இந்நிலையில் இந்திய அணியின் எதிர்காலம் என கருதப்பட்ட சாய் சுதர்சன், ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியதற்கு பிறகு இரண்டாவது போட்டியில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திறமை வாய்ந்த சாய் சுதர்சனை ஒரு போட்டியுடன் பெஞ்சில் அமரவைப்பது அநீதியானது என்றும், இப்படி ஒரு வீரரை அணியிலிருந்து வெளியேற்றுவது அவரின் மன உறுதியை உடைத்துவிடும் என்றும் ரசிகர்கள் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை விளாசி வருகின்றனர்.

சாய் சுதர்சனுக்கு நடந்தது அநீதி..

சட்டீஸ்வர் புஜாராவுக்கு பிறகு சரியான நம்பர் 3 பேட்ஸ்மேன் இல்லாமல் இந்திய அணி தடுமாறிவருகிறது. இந்த சூழலில் தான் திறமையின் கூடாரமாக விளங்கும் சாய் சுதர்சன், இந்திய அணியின் நம்பர் 3 இடத்திற்கு சரியான வீரராகவும், நீண்டகாலம் அவ்விடத்திற்கு நேர்செய்யும் வீரராகவும் இருப்பார் என ஜாம்பவான்களால் கூறப்பட்டது.

இப்படி எல்லோருடைய விருப்பமான வீரராக இருந்த சாய் சுதர்சன், ஒரு போட்டியுடன் பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழலில் சாய் சுதர்சனுக்கு ஆதரவாகவும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு எதிராகவும் கருத்திட்டு வரும் ரசிகர்கள் கம்பீர் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கில் வைத்து வருகின்றனர்.

சாய் சுதர்சனுக்கு நடந்திருப்பது அநீதி என்று தெரிவித்திருக்கும் ரசிகர் ஒருவர், “குறைந்தது ஒரு வீரர் 3 அல்லது 4 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிய பிறகு தான் நீக்க வேண்டும், சாய் சுதர்சனுக்கு நடந்திருப்பது அநீதி” என்று எழுதியுள்ளார்.

மற்றொரு ரசிகர், “முதல் டெஸ்டில் முதல் 4 நாட்கள் நன்றாக விளையாடிய பிறகு ஏன் இவ்வளவு பீதி” என்று எழுதியுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர், “மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது, புஜாராவுக்குப் பிறகு, இந்தியா இன்னும் நிரந்தர நம்பர் 3 பேட்ஸ்மேனைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இப்போது சாய் சுதர்சன் இருக்கிறார், அவர் இளமையாகவும் இருக்கிறார், நீண்ட காலம் இந்தியாவுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு வீரராகத் தெரிகிறார். அப்படியான ஒருவீரர் ஒரு போட்டியில் தோல்வியடைந்ததற்காக, நீங்கள் அவரைக் கைவிடப் போகிறீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு ரசிகரோ, “திறமையான சாய் சுதர்சன் ஒரு போட்டிக்குப் பிறகு நீக்கப்படுவது மிகவும் அவமானகரமானது, மேலும் இந்தியாவுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் மட்டுமே விளையாடப்போகும் கருண் நாயர் ஆதரிக்கப்படுகிறார். ஆனால் நாம் இளம் வீரர்களில் முதலீடு செய்வதில்லை, சாய் தான் நம்முடைய எதிர்காலம் கருண் நாயர் அல்ல. கவுதம் கம்பீர் மற்றும் அணி நிர்வாகத்தின் மற்றொரு மோசமான நடவடிக்கை இது” என்று எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com