ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் எக்ஸ்
தமிழ்நாடு

லண்டன் | ”பெரியார் உலகமயமாகிறார், உலகம் மனிதாபிமானத்தை தழுவட்டும்” - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

PT WEB

தமிழ்நாட்டிற்காக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒரு வார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 30 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக ஜெர்மனி சென்றடைந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

பின்னர் அங்கு, நடைபெற்ற ‘டிஎன் ரைசிங் ஜெர்மனி’ என்னும் முதலீட்டார்கள் மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அங்குள்ள தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் செப்டம்பர்-2 ஆம் தேதி ஜெர்மனி சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து சென்றடைந்தார். லண்டன் விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “பல நூறு ஆண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக்த்தில் உரையாற்றுவதில் பெருமையடைகிறேன். திமுகவின் தலைவர் என்பதைவிட பெரியாரின் பேரன் என்கிற கம்பீரத்தோடு உங்கள் முன் பேசுகிறேன்.

சமூகநீதி என்பதை தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுதும் கொண்டு சென்றவர் பெரியார். பழமைவாதங்களும், பிற்போக்குத்தனமான கருத்துக்களும் சமூகத்தில் இருந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பே முற்போக்குக் கருத்துக்களை பேசிய பெரியாரின் உருவப்படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் திறந்து வைத்திருக்கிறேன். பெரியார் உலகமயமாகிறார், உலகம் மனிதாபிமானத்தை தழுவட்டும்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்தப்பின் பேசினார்.

மேலும் இந்த நிகழ்வு குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். அதில், “ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்!” என பதிவிட்டிருக்கிறார்.