MK Stalin x page
தமிழ்நாடு

தொகுதியில் தோல்வி | ”என்றும் கொளத்தூர்தான்..” - மு.க.ஸ்டாலின் பதிவு!

தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், திமுக தோற்றதோடு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினும் தோல்வியை தழுவினார்.

Prakash J

கொளத்தூருக்கும் தனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். இத்தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், திமுக தோற்றதோடு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினும் தோல்வியை தழுவினார். இதற்கு முன்பு 3 முறை வெற்றிபெற்ற சொந்தத் தொகுதியிலேயே தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தோல்வியது திமுக கட்சியினரை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தச் சூழலில் தனக்கு வாக்களித்த 74,000 வாக்காளர்களை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என கொளத்தூர் சென்ற மு.க.ஸ்டாலின், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். இந்த நிலையில், கொளத்தூருக்கும் தனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.

தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன். ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.