ஸ்டாலின், ஓ. பன்னீர் செல்வம் Pt web
தமிழ்நாடு

திமுக வேட்பாளர் தேர்வு | ஓபிஎஸ்-ஐ இன்று நேர்காணல் செய்யும் முதல்வர் ஸ்டாலின்.!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று முதல் தொடங்கியிருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை இன்று நேர்காணல் செய்கிறார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின்.

Premkumar S

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை மே. 4 ஆம் தேதி எண்ணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான், தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்து தேர்தல் சந்திக்கவிருக்கிறது. இக்கூட்டணியில், தொகுதிப்பங்கீடுப் பேச்சுவார்த்தையும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

அண்ணா அறிவாலயம்

இதற்கிடையில், திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் கடந்த மாதம் பிப்ரவரி 20-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 6-ம் தேதி வரை முடிந்தது. இதில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில் தான், விருப்ப மனு அளித்தவர்களுக்கான வேட்பாளர் நேர்காணலை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நேற்று (மார்ச் 17 ) தொடங்கியிருக்கிறார். அதன்படி, முதல் நாளான நேற்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான நேர்காணல் நடைபெற்றது. திமுகவின் வேட்பாளர் நேர்காணல் மார்ச் 22 ஆம் தேதி முதல் நடைபெறும் எனத் தெரிவித்திருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களின் வேட்பாளர் நேர்காணல் நடைபெறவிருக்கிறது.

இந்த சூழலில் தான் இன்று, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான வேட்பாளர் நடைபெறவிருக்கிறது. அதன்படி, அதிமுகவில் இருந்து தமிழக முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் சமீபத்தில் திமுகவில் இணைந்திருக்கும் நிலையில், அவரும் போடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். இதையடுத்து, அவருக்கான நேர்காணல் இன்று நடைபெறவிருக்கிறது. மேலும், ஆண்டிப்பட்டி தொகுதிக்கு விருப்பமனு அளித்திருக்கும் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தரநாத்-தின் நேர்காணலும் இன்று நடைபெறவிருக்கிறது.