முக ஸ்டாலின் web
தமிழ்நாடு

”இல்லாத சரஸ்வதி நதி நாகரிகம்.. 2000 ஆண்டுகால சண்டையில் தோற்க மாட்டோம்” - முக ஸ்டாலின் விமர்சனம்

இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தை தேடி அலையும் சிலருக்கு தமிழரின் நாகரிகம் தெரிவதில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Rishan Vengai

முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை மத்திய அரசு மறைக்க முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார். சரஸ்வதி நதி நாகரிகம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயல்கின்றனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழர்களின் தொன்மையை உணர அருங்காட்சியகங்களை பார்வையிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நெல்லையில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தை தேடுவதில் ஆர்வம் காட்டும் சிலர், தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் வெறுப்புடன் செயல்படுகின்றனர். தமிழர்களின் வரலாற்று அகழாய்வு முடிவுகள் வெளியே வந்துவிடக் கூடாது என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.

MK Stalin

மேலும், ஈராயிரம் ஆண்டுகால சண்டையில் தோற்றுவிட மாட்டோம் என, முதல்வர் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருநை போன்ற அருங்காட்சியகங்கள் அமைப்பதற்கான காரணம் குறித்து பேசிய அவர், பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை வந்து பார்த்தால்தான், தமிழர்களின் நாகரிகம் எவ்வளவு தொன்மையானது என அறிந்துகொள்ள முடியும் என்றார்.

சரஸ்வதி நதி நாகரிகம் குறித்து ஆளுநர் பேசியது என்ன?

கோவை கல்லூரியில் நடைபெற்ற 'சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ”உலக அளவில் நதிகளின் கரைகளில் தான் நாகரிகங்கள் உருவாகின. நதிகள் அழியும்போது நாகரிகங்களும் மறைந்தன. அதேபோல், பாரதத்தின் தொன்மையான நாகரிகமும் சரஸ்வதி நதிக்கரையோரம் தான் உருவானது. காலப்போக்கில் சரஸ்வதி நதி அழியும்போது நாகரீகமும் மறைந்தது. ஆனால் அதன் தாக்கம் நாடு முழுவதும் உள்ளது.

சரஸ்வதி நதிக்கரையோரம் உருவான நாகரிகத்தில், உலகின் பிற நாகரிகங்களைப் போல கட்டுமான கலை, மக்கள் குடியிருப்பு ஆகியவை இருந்த போதும், இதன் தனித்துவமாக அறிவு சார்ந்த விஷயங்கள் மற்றும் வேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.  ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன.

ஆளுநர் ரவி

இருந்த போதும், ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றின் கருத்துக்களை பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு இலக்கியங்களிலும் உள்ளது. குறிப்பாக தமிழ் சங்க இலக்கியங்களான அகநானூறு புறநானூறு சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகியவற்றில் ராமாயணத்தின் சம்பவங்களும் உள்ளன. 

இவ்வாறு சரஸ்வதி நதிக்கரையில் உருவான நாகரிகமும் அங்கு உருவாக்கப்பட்ட தத்துவங்களும் மொழிகளைக் கடந்து இனங்களை கடந்து பாரதம் முழுவதும் பரவியுள்ளது. பாரதம் மட்டுமின்றி உலகத்திற்கே அந்த கருத்துக்கள், தத்துவங்கள் இன்று தேவைப்படுகின்றன. இந்த உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று என்பது நமது வேதங்களின் அடிப்படையாகும்” என பேசியிருந்தார்.