தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளை தடுக்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என் பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த ஆணையம் சட்ட வல்லுநர்கள், முற்போக்காளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்டு செயல்படும். ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் ஆணவக்கொலைகள் குறித்தான சட்டமன்ற உறுப்பினர்களின் நேற்றைய விவாதத்திற்கு பதிலளித்துப் பேசினார். அப்போது, “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அறநெறியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்ன வள்ளுவர் பிறந்த மண் தமிழ் மண். இடையில் வந்தவர்களால் சாதியக் கோட்பாடுகள் உருவாகியது. மேல் கீழ் என்ற பாகுபாடுகள் உருவாகின. வேற்றுமைகள் விதைக்கப்பட்ட உடனேயே தமிழ் மண்ணில் ஒற்றுமைக்கான குரல்களும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. அயோத்திதாச பண்டிதர், பெரியார், அண்ணா உள்ளிட்டப் பலர் சீர்திருத்த சிந்தனைகளை தமிழ் மண்ணில் விதைத்தவர்கள். அதைத் தொடர்ந்துதான் நாங்கள் திராவிட மாடல் அரசை நடத்தி வருகிறோம்.
சாதி வேற்றுமைகளை களைவதற்கான நடவடிக்கைகளாகவே காலணி சொல் நீக்கம், சமூக நீதி விடுதிகள் பெயர் மாற்றம் போன்ற சமூக நீதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், உலகெங்கெங்கிலும் அறிவினால் மதிக்கப்பட்டு வரும் தமிழ்சமூகம் உள்ளூரில் சண்டை போட்டு வருவது என்ன நியாயம்? என்ற கேள்வி வருகிறது. எதன்பொருட்டும் ஒருவரை கொல்வதை ஏற்க முடியாது. மேலும், பெண்கள் தங்கள் துணைகளை தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிக்கும் ஆணாதிக்கமும் இதற்கு காரணம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது.
ஆணவப் படுகொலைகளுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இப்படுகொலைகளுக்கு சாதி மட்டும் காரணமல்ல. இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன. ஆனால், எதன் பொருட்டு கொலை நடந்தாலும் கொலை கொலைதான். சமுதாயத்தில் சாதிய மற்றும் ஆதிக்க மனப்பாண்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும்.
இந்நிலையில், சாதிய ஆணவப் படுகொலையை தடுக்கும் நோக்கில் ஓய்வுப்பெற்ற நீதிபதி கே.என் பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்காளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஆணையம் அமைக்கப்படும். மேலும், அந்த ஆணையத்தின் பரிந்துரையின் படி ஆணவக்கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.