indumathi
indumathi pt desk
தமிழ்நாடு

காணாமல் போன பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர், காவல் நிலையத்தில் தஞ்சம்! நடந்தது என்ன?

webteam

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர் தட்டு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மனைவி இந்துமதி. கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால், பாண்டியன் தனது மனைவி இந்துமதியை நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட வைத்தார்.

panchayat president

இந்நிலையில், மாற்று சமூகத்தினர் அதிகம் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியலின பிரிவினருக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டத்தை கண்டித்து நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் இந்துமதி தலைவர் பதவிக்கு போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இருப்பினும் இந்துமதியை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து நாயக்கனேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த சிலர் பாண்டியன் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு, அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அனைவருக்கும் அப்பகுதியில் எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருந்துள்ளனர். இந்துமதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் வழக்கும் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது.

panchayat president

இதனால் பாண்டியனின் உறவினர்கள் மலை கிராமத்தை விட்டு வெளியேறி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்றுள்ளனர். பாண்டியன் தனது மனைவி இந்துமதி மற்றும் இரு ஆண் பிள்ளைகளுடன் மலை கிராமத்தை விட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 09.09.2023 அன்று கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற இந்துமதி, வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பாண்டியன் பல இடங்களில் தேடியுள்ளார்.

நேற்று காலை இந்துமதி காணாததை குறித்தும் நாயக்கனேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மீது சந்தேகம் உள்ளதாகவும் இந்துமதியின் கணவர் பாண்டியன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு இந்துமதியை தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்து பாண்டியன் தன்னை தேடுவதை அறிந்த இந்துமதி, தாமாகவே ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

பாண்டியன் - இந்துமதி

அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், “நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி குறித்து பல பிரச்னைகளை சந்தித்து வந்தேன். இதனால் என் கணவருடன் அடிக்கடி சண்டையிட நேர்ந்தது. ஆகவே அதிக மன உளைச்சலில் இருந்தேன். இதனால் வீட்டிலிருந்து வெளியேறினேன்” என்று தெரிவித்துள்ளார். தனது கணவர் தன்னை காணவில்லையென காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பார்த்து தானாகவே வந்துள்ளதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் இந்துமதியை அவரது கணவர் பாண்டியனுடன் அனுப்பி வைத்தனர்.