திருப்பத்தூர்: பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் மாயம்... காவல்நிலையத்தில் கணவர் புகார்!

ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலைகிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஜவ்வாது மலைதொடரில் அமைந்துள்ளது நாயக்கனேரி மலைகிராமம். இங்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, இந்துமதி என்ற பட்டியலின பெண் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி
பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி

ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து மலை கிராம மக்கள் இந்துமதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர்.

இதனால் இந்துமதி மற்றும் அவரது கணவர் பாண்டியன் மலைகிராமத்தைவிட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 09.09.2023 அன்று சனிக்கிழமை மாலை இந்துமதி வீட்டில் இருந்து பால் வாங்கி வருவதாக தனது கணவர் பாண்டியனிடம் தெரிவித்து வெளியே சென்றுள்ளார்.

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி
பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி

பின்னர் வெகுநேரம் ஆகியும் இந்துமதி வீடு திரும்பாததால் பாண்டியன் அவரை பல இடங்களில் தேடியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போதுவரை இந்துமதி வீடு திரும்பாததால் இதுகுறித்து பாண்டியன் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் மாயமானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com