திமுக கூட்டத்தில் விஜய் குறித்து அவதூறு பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது, ஜாமீன் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் எலும்பு உடைப்பேன் என மிரட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தியாளர் - M. மீரா
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் தவெக இடையே மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஜூன் 20-ஆம் தேதி திமுக பொதுக்கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன், பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டார். இந்த கைது தமிழ்நாட்டில் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது."
இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, தவெக தலைவர் விஜய் குறித்து பேசும் போது எலும்புகளை உடைப்பேன் என்று மிரட்டும் தொனியிலும், அவதூறாகவும், பேசியதாக புகார் எழுந்துள்ளது.புகாரின் பேரில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் தனது X தளத்தில் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவரது பதிவில், சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர். மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர்.
இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.