அமைச்சர் உதயநிதி - கே.என்.நேரு
அமைச்சர் உதயநிதி - கே.என்.நேரு @udhay | twitter
தமிழ்நாடு

தொடரும் கனமழை... நெல்லை விரைகிறார் அமைச்சர் உதயநிதி!

ஜெனிட்டா ரோஸ்லின்

இன்று கோவையில் வைத்து ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். சேலத்தில் இத்திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தனர்.

தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மக்களுடன் முதல்வர் திட்டத்திற்காக சேலம் மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 142 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கெல்லாம் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய தேவையான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுடன் முதல்வர் திட்டத்தினை கோவையில் முதல்வரும் சேலத்தில் நானும் துவங்கி வைத்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகம் கோரிக்கை வைக்கின்ற 13 துறைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் பல்துறைகளில் உள்ள குறைகளை தீர்த்துவைக்க ஏதுவாக இத்திட்டமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலமாக மாநகர மற்றும் நகர பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துக்கள் என்று மொத்தம் 1,425 சிறப்பு முகாம்களில் அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளது.

Udhayanidhi Stalin

இந்த 13 துறைகளிலும் தேவையான அளவு உதவிகளை பெறுவதற்கு ஹெல்ப் டெஸ்க் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் இணையத்தின் மூலமாகவும் உதவிகள் பெற்றுக்கொள்ளலாம்” என்று பேசினார்.

தொடர்ந்து அவரிடம் நெல்லை கனமழை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு “தற்போது அங்குதான் சென்று கொண்டிருக்கிறேன்” என பதிலளித்தார் அமைச்சர் உதயநிதி. முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் இன்று மாலை அமைச்சர் உதயநிதி நெல்லை சென்று அங்கு வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.