தொல்லியல் முடிவு - அமைச்சர் தங்கம் தென்னரசு முகநூல்
தமிழ்நாடு

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு ஆதாரம்; அமைச்சர் தங்கம் தென்னரசு போட்ட பதிவு!

“இரும்பின் தொன்மை குறித்து வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அறிவியல் ஆய்வு முடிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகிற்கு அறிவித்த ஒரு சில தினங்களில்...” - அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஜெனிட்டா ரோஸ்லின்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில், ”தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” என்று அகழாய்வு ஆதாரங்களின் அடிப்படையில் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார் முதல்வர்.

இந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இரும்பின் தொன்மை குறித்தான மற்றொரு முக்கிய அறிவிப்பினை ஆதாரத்தின் அடிப்படையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

அதில், “இரும்பின் தொன்மை குறித்து வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அறிவியல் ஆய்வு முடிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகிற்கு அறிவித்த ஒரு சில தினங்களில், கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 257 செ.மீ. ஆழத்தில், , 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், இரும்பினாலான அம்பு முனை, ஆணிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது கத்தி கிடைத்துள்ளதன் மூலம், தொல் தமிழர் நாகரிகம் இரும்பின் பயன்பாடு அறிந்து, அதன் நுட்பங்களை கற்றுத்தேர்ந்திருந்தது புலப்படுகிறது.

இதற்கு முன்னர் மருங்கூர் அகழாய்வில், இராஜராஜ சோழன் காலத்துச் செம்பு காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூதுபவளம், கண்ணாடி மணிகள், ரெளலட்டட் பானை ஓடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது இரும்பினாலான கத்தி கிடைத்துள்ளதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் இது என்பது உறுதியாகியுள்ளது” என்றுள்ளார் அவர்.