இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் வெளியேறியது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது:
“ஆளுநர் இன்று சட்டமன்றத்தில் நடந்துகொண்டது தமிழ்நாடு மக்களையும், சட்டப்பேரவையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. பாரம்பரியமாக சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்ச்சிகளை மாற்ற வேண்டும் என ஆளுநர் நினைக்கிறார்.
அது நடக்காத காரணத்தினாலும், ஆளுநர் உரையை வாசித்தால் இந்த ஆட்சியின் சாதனைகளை விளக்கவேண்டும் என்ற காரணத்தினாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற காரணத்தினாலும் அவர் இவ்வாறு வெளிநடப்பு செய்து வருகிறார்.
ஆட்சியின் சாதனைகளை விளக்கும்விதமாக 59 பக்க ஆளுநர் உரையை விளக்க மனம் இல்லாமல் ஆளுநர் இப்படி நாடகம் நடத்துகிறார். கடந்த முறை தமிழ்நாடு தலைவர்களின் பெயர்களை கூறாமல் சென்றவர், இந்தமுறை உரையை புறக்கணித்து சென்றிருக்கிறார். தேசிய கீதம் பாடாததால் அவர் வெளிநடப்பு செய்ததாக அவர் காரணம் கூறி இருக்கிறார். ஏதோ தேசபக்திக்கு ஒட்டுமொத்த குத்தகை அவர்தான் என்பது போல பேசுகிறார்.
தேசபக்தியில் தமிழ்நாட்டில் மிஞ்சிய ஆள் அவர் கிடையாது. சேதத்திற்காக தமிழ்நாட்டில் பலரும் உயிரை கொடுத்துள்ளனர். இதுவரை எத்தனை ஆளுநர்கள், முதலமைச்சர்கள் இருந்து இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் அந்த எண்ணம் கிடையாதா?
அதிமுகவும் பாஜகவும் ஒன்றாக இருந்த காலத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடிவிட்டு அவை முடிவில் தேசியகீதம் பாடும் வழக்கம் இருந்தது. இன்றைக்கும் அப்படித்தான். எனவே தேசிய கீதத்தை யாரும் அவமதிக்கவில்லை. தவறாக வார்த்தைகளை கூறி வரும் ஆளுநர் வருத்தம் தெரிவிக்கவேண்டும்.
ஏற்கனவே தமிழ்நாட்டு மக்கள் ஆளுநரை புறம்தள்ளி இருக்கின்றனர். அவர், தானொரு நியமிக்கப்பட்ட ஆளுநர் என்பதை மறந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் போல பேசி வருகிறார். அவர் இந்த அவையை அவமதித்தது தொடர்பாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
திராவிட முன்னேற்றக்கழகம் இவர்களை விட தேசபக்தியை குறைந்தவர்கள் கிடையாது. தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் ரவிதான். அவரது ஒட்டுமொத்த நடவடிக்கையும் தவறானது. அவரது பதவிக்காலம் நீதிக்காமல் இருப்பதை அவமானமாக கருதி அவர் தானே வெளியேற வேண்டும்” என்றார் அமைச்சர் சிவசங்கர்.