அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர் முகநூல்
தமிழ்நாடு

“அதிமுக தொழிற்சங்கங்களோடு சேர்ந்து கொண்டு போராட்டம்” - அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு

ஜெனிட்டா ரோஸ்லின்

6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் பேருந்து இயக்கம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

அப்போது அவர் கூறுகையில், “அரசியல் காரணங்களுக்காக இந்த போராட்டத்தினை சிலர் நடத்துகின்றனர். இது திசை திருப்புகின்ற செயல். அதுவும் இந்த போராட்டதிற்கெல்லாம் காரணமாக இருக்கும், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் சில தொழிற்சங்கங்களோடு சேர்ந்து கொண்டு போராடுகின்றனர். இது மிகுந்த கவலைக்குரியது, வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது. கடந்த 96 மாதங்களாக வழங்கவேண்டிய அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமியே கூறுகிறார். எனில் அது கடந்த ஆட்சியிலிருந்தே அப்படி உள்ளது. அந்த நேரத்தில் அகவிலைப்படி தொகையை அவர்கள் வேறு எங்கோ செலவு செய்துவிட்டனர்.

கடந்த 10 ஆண்டுகாலமாக திராவிட கழகத்தின் தொழிற்சங்கமான தொமுச உங்களுடன் (தற்போது போராடும் தொழிற்சங்கங்கள்) துணை நின்று போராட்டங்கள் பல நடத்தி இருக்கிறார்கள். தற்போது கூட போராட்டத்திற்கு துணை நிற்கிறோம் என்று கூறி இருக்கின்றனர். எனவே இங்கே நாங்கள் கேட்பது நேர அவகாசம்தான்.

"அதிமுக ஆட்சிதான் காரணம் என இபிஎஸ்ஸே கூறியுள்ளார்"

பொங்கல் நேரம் இது. மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்கின்ற நேரம். எனவே சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவேண்டிய சூழல் இருக்கிறது. இந்த நேரத்தில் போராட்டம் என்பது பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடியது.

திராவிட கழகம் என்றைக்கும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற இயக்கம். எனவேதான் தமிழ்நாட்டிலே அரசு பேருந்துகளை காப்பதற்கான வேலைகளை முதல்வர் செய்து வருகிறார். இதற்கென்று 2,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு நிதியை ஒதுக்கியுள்ளார். புதிய பணியாளர்களை எடுக்க அராணையை வழங்கியுள்ளார்.

நாங்கள் கேட்பதெல்லாம் இதற்கு கால அவகாசம்தான். எனவே சுமூகமாக இயங்கி கொண்டு வரும் பேருந்துகளுக்கு எந்த இடையூரும் செய்ய வேண்டாம். உங்கள் கருத்துகளையும், உரிமையும் தெரிவிக்க நாங்கள் எந்த கருத்து மாறுபாடும், எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

மேலும் எந்த கூட்டமைப்பினர் போராட்டம் என்று அறிவித்தார்களோ அவர்களே தற்போது பேருந்தை இயக்கி கொண்டு வருகிறார்கள். ஆகவே எந்த நேரத்திலும் உங்களோடு பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றார்.

முன்னதாக நேற்றைய தினம் வேலை நிறுத்த போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தொழிற்சங்கங்கள் தெரிவித்த குறைந்தபட்ச கோரிக்கையையான ‘ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உள்ளது. அதில் இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கினால்கூட போதும்.

அதற்கு ரூ.70 கோடி மட்டுமே ஆகும். நிலுவையில் உள்ள 96 மாதகால அகவிலைப்படியையும் மற்றும் இதர கோரிக்கைகளையும் பொங்கலுக்குப் பிறகுகூட பேசிக் கொள்ளலாம். இதனை இந்த அரசு ஏற்றுக்கொண்டால் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என்பதைகூட ஏற்காத மனிதாபிமானமற்ற அரசாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு,

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய குறைந்தபட்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்” என்று திமுகவிற்கு எதிராக தனது கண்டனத்தினை சற்று காட்டமாக தெரிவித்திருந்தார்.