பொங்கலுக்கு முன்னதாக கிளாம்பாக்கம் ரயில்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரம் கல்மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் ரூ. 1.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்திற்கான பூமி பூஜையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு பங்கேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவிடத்தில் உள்ள முதல்வர் படைப்பகத்தின் பணிகளை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த கால ஆட்சியாளர்களால் போதிய திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டாலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பயணிகளுக்கான கழிப்பிடம், ஓட்டுநர்களுக்கான தங்குமிடம், கடைகள், உணவகங்கள், பூங்காக்கள், இணைப்புச் சாலைகள், மழைநீர் வடிகால்கள் என பல்வேறு கட்டமைப்புகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டது.
கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை ஆய்வு செய்துள்ளார். மேலும், ரயில் நிலையத்தை ஜனவரி மாதம் தொடக்கத்திலேயே பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெற்கு ரயில்வேவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.
ஏனெனில், ஜனவரி மாதத்தின் தொடக்கத்திலேயே கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறந்து வைத்தால் பொங்கலுக்கு ஊருக்குச் செல்லும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து, கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணியை இரண்டு ஒரு நாளில் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளோம்” எனத் தெரிவித்தார்.