அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர், மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. இவ்விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகி உள்ள ஞானசேகரனுக்கு வரும் 8ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, கைதான ஞானசேகரன் திமுக நிர்வாகி என்றொரு தகவல் பரவிய நிலையில், அதை மறுத்து அமைச்சர் கோவி செழியன் நேற்று பேட்டிக் கொடுத்திருந்தார்.
இருப்பினும் எதிர்க்கட்சியினர், ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என கூறி வருகின்றனர். அதற்கு ஆதாரமாக அந்நபர் உதயநிதி, மா.சுப்பிரமணியன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்கின்றனர்.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், “அந்த புகைப்படத்தை நீங்க பாத்தீங்கன்னா, துணை முதல்வருக்கும் அந்த நபருக்கும் இடையில் ஒரு Gap இருக்கும். ஒருவர் நடந்துவரும்போது அவர்கூட இன்னொருத்தர் ஃபோட்டோ எடுக்குறது எங்கயுமே சகஜம்தான்; நாங்க ஒரு இடத்துக்கு போறோம்னா, பக்கத்துல யார் வர்றாங்க, எதிர்ல யார் வர்றாங்கனு பார்த்து, கூட நின்னு செல்ஃபி எடுக்கிறவங்கலெல்லாம் தடுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் எங்களை வந்து சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்ளலாம். அமைச்சர்களை மக்கள் சந்திப்பதை தடுக்க முடியாது
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமென்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்றால், அது தமிழ்நாடுதான் என்பதை இங்கே நான் தெரிவித்துக்கொள்கிறேன். தளபதியின் ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என்று நம்பியதால்தான், பாதிக்கப்பட்ட பெண் தானே முன்வந்து புகாரளித்துள்ளார்.
கைதான ஞானசேகரன், சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்தவர். அந்த தொகுதி எம்.எல்.ஏ.-வான அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவிக்க யார் வேணாலும் வரலாம். அந்தளவுக்கு நிறைய உதவி பண்ணிருக்கார் மா.சுப்பிரமனியன். அப்படி நன்றி சொல்ல வருபவர்களை யாரும் தடுக்க முடியாது.
எனக்கே ஒருத்தர் சால்வை போர்த்தி ஃபோட்டோ எடுத்தாலும் அதை நான் தவிர்க்க முடியாது. அப்படி செஞ்சா, ‘தொண்டரை தள்ளிவிட்ட அமைச்சர்’னு அதை ஒரு செய்தி ஆக்கிடுவீங்க” என்றார். தொடர்ந்து அவரிடம், பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான எந்த அடையாளம் அடங்கிய எஃப்.ஐ.ஆர். கசிந்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அது எதையும் அரசு சார்பில் யாரும் தெரிவிக்கவில்லை” என்றார்.