செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
வங்கக்கடலில் கடந்த 29-ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயலானது தமிழகத்தின் வட மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிவிட்டு சென்றுள்ளது. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் திசைமாறிய புயலானது விழுப்புரம், திருவண்ணாமலை முதலிய மாவட்டங்களை எப்போதும் இல்லாதவகையில் தீவர பாதிப்பிற்குள் தள்ளியுள்ளது. பல மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து சாப்பாட்டிற்கு வழியில்லாமல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனனர். பல உயிரிழப்புகளும் மோசமான வகையில் நடந்தேறியுள்ளது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய உடனடியாக ரூ.2000 கோடி நிவாரண தொகையை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் வைத்துள்ளார். அதை பல அரசியல் தலைவர்கள் வழிமொழிந்து, “உடனடியாக நிவாரண நிதியை ஒதுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் மத்திய அரசு நிதி ஒதுக்குவது குறித்து பேசியிருக்கும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “அவர்களுக்கு மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற குறிக்கோளே இல்லை” என விமர்சித்தார்.
நேற்றைய தினம் தவெக தலைவர் விஜய், “எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர்” என்று ஆளுங்கட்சி மீது விமர்சனம் வைத்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், “மத்திய அரசிடம் நிதி கேட்டு கொடுக்கவில்லை என்றால் அதற்கு காவி நிறம் பூசத்தானே வேண்டும், அதில் என்ன தவறு இருக்கின்றது? மத்திய அரசு நிறமே காவிதானே...! ஒன்றிய அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் முன்பெல்லாம் மஞ்சள் நிறம் அடித்தோம். தற்போது காவி நிறம் அடித்து வருகின்றனர். காவிமயமாக்குவது அவர்களது குறிக்கோளாக இருக்கிறதே தவிர மக்களை காப்பாற்ற வேண்டியது குறிக்கோளாக இல்லை” என விமர்சித்தார்.
இதைத்தொடர்ந்து, நேற்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொள்வதே குற்றம் என கருதும் சூழல் உள்ளதால் என்னால் சரியாக இந்தி பேச முடியவில்லை’ என்று கூறியது பற்றி ரகுபதியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “இந்தி எங்கு கற்றுக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் யாரையும் கிண்டல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இந்தியை திணிக்காதீர்கள் என்பதுதான் எங்கள் நிலைப்பாடே தவிர, யாரையும் இந்தி கத்துக்க கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை, யாரையும் தடுக்கவும் இல்லை” என கூறினார்.
அமைச்சர் பொன்முடி மீது சேர் வீசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எதையும் தாங்கும் இதயம் எங்களுக்கு உண்டு” என்று கூறினார்.