PTR
PTR pt desk
தமிழ்நாடு

“வாஷிங் மெஷின் போல செயல்படுகிறது பாஜக” - விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

I.N.D.I.A. கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மேலமாசி வீதியில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்...

“வாஷிங் மெஷின் போல செயல்படுகிறது பாஜக” 

“பாஜகவில் இணைந்தால் போதும், அவர்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ஆவியாகி விடும். பாஜக ஒரு வாஷிங் மெஷின் போல செயல்படுகிறது. யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் சொன்னார்களோ அவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணியில் இப்போது சேர்ந்து விட்டார்கள். இதையடுத்து அவர்களுடைய வழக்குகள் எல்லாம் ஆவியாகி விட்டன.

முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நாடு முழுவதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 25 கட்சிகள் இப்போது காணாமல் போய்விட்டன.

“பணத்தை மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது பாஜக”

டெல்லி முதலமைச்சரை சிறையில் அடைக்கிறார்கள், காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதெல்லாம் ‘வென்று விடுவோம்’ என்ற தில்லோடு இருப்பவர்கள் செய்கிற செயலா? பயத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல் இது! பணம் மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளார்கள் ஒன்றிய பாஜக-வினர். நம்முடைய வரிப்பணத்தை எடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலத்துக்கு கொடுத்துள்ளார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அங்கு வளர்ச்சி ஏற்படவில்லை.

PTR

“பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது மோடி, ஏற்றுவது எண்ணெய் நிறுவனங்களா?”

கச்சா எண்ணெய் விலைக்கும் பெட்ரோல் டீசல் விலைக்கும் சம்பந்தம் இல்லாத ஒர் திட்டத்தை உருவாக்கியது இந்த அரசு. கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதில்லை. கச்சா எண்ணெய் விலை குறையும் போது, பெட்ரோல் விலையை குறைக்காமல் எங்களுக்கும் அந்த நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பார்கள். ஆனால், தேர்தல் வரும் போது பிரதமரே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அறிவிப்பார்.

“நீங்கள் சொல்வதை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நம்ப மாட்டார்கள்”

இந்த நிறுவனங்கள் உங்கள் கட்டுபாட்டில் இருக்கிறதா, இல்லையா? விலையை குறைக்கும் போது உங்கள் நிறுவனம்... ஏற்றும் போது வேறு நிறுவனமா? இப்படி நீங்கள் சொல்வதை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றால் நம்புவார்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நம்ப மாட்டார்கள்.

PTR

ஏனென்றால் நாங்களெல்லாம் கல்வி பெற்றவர்கள், பகுத்தறிவு பெற்றவர்கள், ஓரளவு சிந்திக்கக் கூடியவர்கள். எங்கெல்லாம் பணத்தை சுரண்ட முடியுமோ அங்கெல்லாம் சுரண்டி பணம் பணம் என மட்டுமே செயல்படுகிறார்கள் பாஜக-வினர்” என்றார்.