மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே நாளில் இன்று மட்டும் சுமார் 38 லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரடியாக வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”கல்வியில் தென் மாநிலங்களும் தமிழ்நாடும் உயர்ந்த இடத்தில் இருக்கும் சூழ்நிலையில் டெல்லியில் ஒரு தனிக்கல்வி கொள்கையை உருவாக்கி பீகார், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட எந்த மாநிலங்களிலும் கல்வி வளர்ச்சி முழுமையாக அடையாமல், அங்கு வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சி, தாங்கள் உருவாக்கிய கொள்கையை அவர்களை விட பல மடங்கு வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என சொல்வது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
நாங்கள் உருவாக்கிய கல்விக் கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனச் சொல்வது அதிர்ச்சியை தருகிறது. இது பிஎச்டி படிக்காத ஒருவர் phd படித்த ஒருவரை எப்படி உயர் கல்வி படிக்க வேண்டும் என சொல்லித் தருவது போல இருக்கிறது. இதை கிண்டலாக தான் பார்க்க வேண்டும்” என விமர்சித்தார்.
மேலும், “அண்ணாவின் இரு மொழிக் கொள்கையால் உலக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பணிபுரிந்து வருவதோடு, என்னைப் போல பலர் சிறப்பாக வேலை பார்த்து வருகின்றனர்.
நமது கல்வி கொள்கை, இரு மொழிக் கொள்கையில் குறை எதுவும் இல்லை, நிறை மட்டுமே உள்ளது. நமக்கு ஹிந்தியை திணிப்பதற்கு அவர்கள் விருப்பப்படக்கூடாது.
ஒரு மொழிக் கொள்கை கூட சரியாக செயல்படுத்த முடியாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், நாங்கள் கொண்டுவரும் கல்விக் கொள்கையை நீங்கள் செயல்படுத்த வேண்டும் என கூறுவது சர்வாதிகாரம். சட்டமைப்பு படி, கொள்கைப்படி உங்களுக்கு நிதி தர மாட்டேன் என கூறினால் இது சர்வாதிகாரம் தனம்.
மத்திய அமைச்சர் நிதி தர மாட்டேன் என வெளிப்படையாக சொன்னது நல்லது தான். சட்டத்தை தாண்டி அவர்களுடைய விருப்பத்திற்காக நிதி தர மாட்டேன் என மத்திய அமைச்சரே தன்னுடைய வாயால் அரசியலுக்காக சொன்னது நல்லது தான்.
முதல்வர் தெளிவாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இது உச்ச நீதிமன்றத்தில் சென்று தான் நிற்கும். கைமுறுக்கும் தனிநபர் கருத்துள்ள கொள்கையை, தங்களின் விருப்ப செயலை வேறு மாநிலங்கள் செய்யவில்லை என்பதால் ஒரு மாநிலத்திற்கு நிதி தரமாட்டேன் என்பது சர்வாதிகாரத்தமானது. உச்சநீதிமன்றம் செயல்பாட்டில் உள்ளது, சட்டமைப்பு செயல்பாட்டில் இருக்கும் என்ற நம்பிக்கையால் மத்திய அமைச்சரின் பேச்சை அரசமைப்பு கண்டிக்கும் என நம்புகிறேன்” என பேசினார்.