அமைச்சர் அறிக்கை முகநூல்
தமிழ்நாடு

சாத்தனூர் அணை முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதா? நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில்!

5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பிறகுதான் சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது எனவும், இந்த அணையை முன்னெச்சரிக்கையாக திறந்துவிட்டதால்தான் பெரும் உயிர் சேதம் தடுக்கப்பட்டதாகவும் 5 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் வினாடிக்கு 1.80 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட பதிவில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீரை திறந்து விட்டு மக்களின் இன்னல்களை பல மடங்கு பெருக்கியிருக்கிறது அரசு. நள்ளிரவு 1.30 மணிக்கு சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், அடுத்த சில மணி நேரங்களில் 4 மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்பெண்ணை ஆறு ஓடும் 4 மாவட்டங்களிலும் ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள பகுதிகளிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளம் புகுந்ததால் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு மீட்புக் குழுவினரே இன்னும் செல்ல முடியாததால் அங்குள்ள மக்களுக்கு உணவு கூட கிடைக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இவர்களின் குற்றச்சாட்டு பதிலளித்துள்ள தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பிறகுதான் சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த அணையை முன்னெச்சரிக்கையாக திறந்துவிட்டதால்தான் பெரும் உயிர் சேதம் தடுக்கப்பட்டது” என 5 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், “திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் என உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது. ஃபெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிவால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர், தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

அமைச்சர் துரைமுருகன் அறிக்கை பக்கம் 1

சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி, சாத்தனூர் அணையின் வெள்ளப்பெருக்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த விதிகளின் 2-வது பிரிவில் சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டங்களில் வெள்ளம் ஏற்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான உத்தரவுகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படிதான் தொடர்ந்து முன் கூட்டியே கணித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன.

நீர் வெளியேற்றப்படும் போது கரைகளில் உள்ள கொளமாஜனூர், திருவாதனூர், புதூர் செக்கடி, ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் உள்ளிட்ட பல கிராமங்களின் பெயர்களை சாத்தனூர் அணையின் உதவி செயற் பொறியாளர் குறிப்பிட்டு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தார். ஆற்றில் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் துரைமுருகன் அறிக்கை பக்கம் 2

வங்கக் கடலில் நவம்பர் 24-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 27-ஆம் தேதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது 29- ம் தேதி வெள்ளிக்கிழமை ஃபெஞ்சல் புயலாக மாறியது. சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தபடி புயல் வடக்கு. வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னையை நோக்கி சனிக்கிழமை வரத் தொடங்கியது. வெள்ளிக் கிழமை இரவு சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் இருந்த புயல், சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்னைக்கு 90 கி.மீ. தொலைவுக்கு நெருங்கியது. ஆனால், மாலை 5 மணிவரை நகராமல் போக்கு காட்டி புயல் மிரட்டிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், எதிர்பாராத வகையில் மாலை 5 மணிக்கு மேல் புயல், வந்த திசையில் வடக்கு நோக்கிச் செல்லாமல் மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பியது. மீண்டும் மாமல்லபுரம் கரையை நோக்கி நகர்ந்து, கரைக்கு நெருக்கமானது. இரவு 7 மணியளவில் புயல் மரக்காணம் அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது. மழையும் மிகப் பலமாகக் கொட்டியது. புயல்,

அமைச்சர் துரைமுருகன் அறிக்கை பக்கம் 3

நள்ளிரவு 11.30 மணியிலிருந்து 12.30 மணிக்குள் மரக்காணம் அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால்தான் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் மழை பெய்தது. இதனால்தான் சுற்று வட்டாரப் பகுதியிலும் நீர்பிடிப்பு இடங்களிலும் பெய்த மழை நீர், சாத்தனூர் அணைக்கு எதிர்பார்க்க முடியாத வகையில் மிக அதிக அளவில் வந்து சேர்ந்தது. சாத்தனூர் அணையில் மொத்தமாக 7 டி.எம்.சி அளவு நீர்தான் முழு கொள் அளவாக உள்ளது.

ஐந்தாவது முன்னேச்சரிக்கை அளவாக வினாடிக்கு 1,80,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கான அபாயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 4-வது மற்றும் 5-வது முன்னெச்சரிக்கை விடப்பட்ட இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில் கணிக்க முடியாத அளவுக்கு அணையில் நீர் வந்து கொண்டிருந்தது. 5-வது முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கு பிறகும் நீர் வரத்து குறையாமல் மிக அதிக அளவில் இருந்தது. அந்த நேரத்தில் அணையில் இருந்து மிக அதிக அளவாக 1,80,000 கன அடி தண்ணீரை திறந்துவிடாமல் போயிருந்தால், ஆணைக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு 7 டி.எம்.சி தண்ணீரும் வெளியேறியிருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாம் கணக்கில் அடங்காது.

அமைச்சர் துரைமுருகன் அறிக்கை பக்கம் 4

ஆறாத துயரமாக அது மாறியிருக்கும். பெருமளவில் ஏற்பட இருந்த உயிர் இழப்புகளை மிக சாதுரியமாக செயல்பட்டு, மக்களை அரசு பாதுகாத்திருக்கிறது என்பதை நீர் மேலாண்மை, அணை பாதுகாப்பியல் வல்லுநர்களுக்கு புரியும். நிலைமையை அரசு சரியாகக் கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதால்தான் பெரும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன.

அமைச்சர் துரைமுருகன் அறிக்கை பக்கம் 5

வீடுகள், விவசாய நிலங்கள்தான் மட்டுமே வெள்ள நீரில் மூழ்கியது. இதனையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உயிர்கள் விஷயத்திலும் எதிர்க் கட்சிகள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அவதூறுகளை மட்டுமே அள்ளி வீசுகின்றன. பொய்கள் என்றுமே விலை போகாது!” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.