கீர்த்தனா web
தமிழ்நாடு

”மாணவியை கேலி செய்தேனா? நானே அரசுப் பள்ளி தான்” - விமர்சனங்களுக்கு அமைச்சர் விளக்கம்!!

இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி.

Premkumar S

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். ஆனால், அந்த மாணவி பதில் சொல்ல முடியாமல் திணறியதைத் தொடர்ந்து, அருகில் இருந்த ஆசிரியரிடம் முதல் வரிசை மாணவர்களே இவ்வாறு இருந்தால், கடைசி வரிசை மாணவர்களை யோசித்து பாருங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

உதயநிதி - கீர்த்தனா

இந்த வீடியோ சமூக வலைதங்களில் பரவிய நிலையில், ஆய்வு என்ற பெயரில் மாணவர்களின் மன உறுதியை குழைக்கும் வகையில், அமைச்சர் கீர்த்தனா நடந்துகொண்டதாக அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட சமூக வலைதளங்களிலும் பலர் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக, இந்த விவகாரம் குறித்துப் பேசிய, முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள் என விமர்சித்திருந்தார். தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பிஞ்சுக் குழந்தைகளிடம் அமைச்சர் நடந்துகொண்ட விதம் அருவெருப்பு அளிக்கிறது என விமர்சித்திருந்தார்.

அதேபோல, சமூக வலைதளங்களில் சிலர், அமைச்சர் கீர்த்தனா இதுவரை ஆங்கிலத்தில் பேசியுள்ள வீடியோக்களில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி, “உங்களுக்கே தெரியவில்லை” என்ற வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்தசூழலில் தான், விமர்னங்களுக்கு பதிலளிக்கும் வகையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் அரசுப்பள்ளி சீருடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றையும் இணைத்திருக்கிறார். இதுகுறித்தான பதிவில், ”இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.

நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை. கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்? ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும்.

ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம். என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.

இன்னொரு கேள்வி... இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்? அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்” எனத் தெரிவித்துள்ளார்.