மறைந்த ஜெயலலிதா காலத்துக்கு பின் அதிமுகவில் நீடிக்கும் குழப்பங்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையை குறிவைக்கும் எதிர்ப்புகள், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்றோரின் குரல் எழுச்சி ஆகிய சூழலில், எம்.ஜி.ஆர் மருமகன் தீபன், இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம், த.வெ.க.வை நம்பி சென்றால் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் ஆபத்து என எச்சரித்து, EPS தலைமையில் ஒற்றுமை கோருகிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. எனினும் ஒரு கட்டத்தில் தனது போட்டியாளர்களை கட்சியில் இருந்து நீக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
ஆனால், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் இருந்து அதிமுக தொடர்ந்து அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியடைந்த நிலையில், அது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்த சூழலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இதனால் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்றவர்கள் பழனிசாமியின் தலைமைக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுத்துள்ளனர். இதனால் மீண்டும் அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் ஒன்றிணையவேண்டுமே என்றும், கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றுமையாக செயல்படவேண்டும் என்றும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். மருமகனும், நடிகருமான தீபன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் ஓ.பி.எஸ். சுயநலமாக செயல்பட்டு, இரட்டை இலையை முடக்க முயன்றார். ஆனால் அப்படி ஒரு நிலை நடைபெறவில்லை. ஆனால் தற்போது மீண்டும் அதற்கான முயற்சி நடைபெறுகிறது என்று கூறினார்.
மேலும், சி.வி.சண்முகத்தின் செயலால் இரட்டை இலை முடக்கப்பட்டால் மீண்டும் அது கிடைப்பது கடினம் என்றும், த.வெ.க.வை நம்பி சென்றால் நிச்சயமாக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தயவுசெய்து எடப்பாடி பழனிசாமியை குறை சொல்ல வேண்டாம், அவர்தான் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து வழிநடத்தி காப்பாற்றினார் என்றும் அனைவரும் ஒன்றாக இருந்து, எம்.ஜி.ஆரின் கட்சியை மீண்டும் பலப்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.