வங்கக்கடலில் வலுப்பெற்றது புயல் சின்னம் web
தமிழ்நாடு

155 ஆண்டில் 21வது முறை.. வலுப்பெறும் புயல் சின்னம்.. வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியிருந்த புயல்சின்னம் வலுப்பெற்று வருவதாக வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..

Rishan Vengai

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி வரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் கனமழை

இதனால், ஜனவரி 9 முதல் 12-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஜனவரி மாதத்தில் இப்படி ஒரு புயல் சின்னம் உருவாவது 155 ஆண்டுகளில் 21வது முறையாகும்..

வலுப்பெறும் புயல் சின்னம்..

இந்தசூழலில் காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் வலுப்பெற்றுவருவதாக வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுப்பெறும் எனவும், தற்போது புயல் சின்னம் மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், அது காரைக்காலில் இருந்து 920 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 1070 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.