நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து இந்திரா காலனி பகுதிக்கு நேற்று (திங்கள் கிழமை) 9 பேர் கொண்ட மர்மக் கும்பல் பைக்கில் சென்றுள்ளது. அவர்கள் அங்குள்ள டீக்கடை ஒன்றின் மீது திடீரென பெட்ரோல் குண்டை வீசினர். குண்டு, வெடித்துச் சிதறியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது அந்தக் கும்பல் பொதுமக்களை விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
அவர்கள் கண்மூடித்தனமாக வெட்டியதில் இரண்டு பேர் ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் 7 பேர் வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலைத் தேடி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.
வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும், நீங்கா சமூகப் பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும், அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி, ஒடுக்கி, சிறைப்படுத்தி, வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற, தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்தரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.