கல்லூரி மாணவர்களுக்கு OG எனப்படும் உயர் ரக கஞ்சா சப்ளை விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அந்த கும்பலுடன் தொடர்பிலிருந்த விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 7 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனைவரையும் ஜெ ஜெ நகர் காவல்துறையினர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பரம்வீர், ஏழு பேருக்கும் 15 நாள் (18.12.2024) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 3 பேர் நீதிமன்ற காவலில் விசாரணையில் உள்ள நிலையில் அவர்களும் சென்னையில் உள்ள போதை பொருள் தடுப்பு சிற்ப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். இந்த நிலையில் 7 பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறையினர் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, அம்பத்தூர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் மன்சூர் அலிகான் மகனை சிறைக்கு அனுப்பிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசியபோது, “தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், இண்டு இடுக்கு என அனைத்து பகுதிகளும் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என்னுடைய மகன் என காப்பாற்ற நினைக்க வில்லை. தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட FIRல் குற்றவாளிகளின் செல்போனில் எனது மகன் எண் இருந்தாக கூறி கைது செய்துள்ளனர். இதற்காக கோர்ட் இருக்கு, நீதி அரசர் உள்ளனர். அங்கு பார்த்து கொள்வேன்.
போதைப் பொருளை எதிர்த்து நான் படம் எடுத்தேன் அதனை ஒடிடியில் கூட வெளியிட முடியவில்லை. எப்படி ஹெல்மெட் அணியவில்லை என வசூல் வேட்டை செய்கிறார்களோ அதேபோல்தான் டாஸ்மாக்கை திறந்து குடி மக்களின் உடலை கெடுத்து வருகின்றனர். ஒரே நாளில் அனைத்தையும் நிறுத்த முடியும்தானே. நேரம் வரும்... அப்போது பொங்குவேன்..” எனத் தெரிவித்தார்.