நத்தம்: விடியல் இலவச பேருந்தில் மகளிரிடம் டிக்கெட் வசூல்... தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் டிஸ்மிஸ்!
செய்தியாளர்: ரமேஷ்
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு இலவச அரசு பேருந்தில் சென்ற பெண்களிடம் கட்டணம் வசூலித்ததாக தற்காலிக நடத்துநர் மற்றும் ஓட்டுனரை திண்டுக்கல் போக்குவரத்து மண்டல அதிகாரிகள் பணியில் இருந்து விடுவித்து (டிஸ்மிஸ் செய்து) உத்தரவிட்டுள்ளனர்.
நத்தம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் (டிச.03) மதியம் 3:30 மணிக்கு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அரசு பேருந்து பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்தை தற்காலிக ஊழியர்களான ஓட்டுநர் கார்த்திகேயன், நடத்துநர் வேல்முருகன் ஆகியோர் இயக்கியுள்ளனர். மகளிர் இலவசமாக பயணிக்கும் இந்த பேருந்தில் பயணித்த பெண்களிடம் நடத்துநர் வேல்முருகன், டிக்கெட் வசூலித்தார். இதனால் அப்பெண்கள் நடத்துனரிடம் கேள்வி எழுப்பினர். அவர் முறையாக பதில் அளிக்காத நிலையில், சிங்கம்புணரியில் பயணிகளை இறக்கி விட்ட பேருந்து மீண்டும் நத்தத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து நத்தம் போக்குவரத்து கிளை அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக திண்டுக்கல் மண்டல அதிகாரிகளிடமும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் விசாரணை நடத்தினார். விசாரணையில் 10 நாட்களுக்கு முன்பு நத்தம் போக்குவரத்து கிளையில் நடத்துநராக பணிக்கு சேர்ந்த வேல்முருகன், மகளிரிடம் டிக்கெட் வசூலித்தது உறுதியானது.
இதையடுத்து திண்டுக்கல் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் தற்காலிக நடத்துநர் வேல்முருகன் மற்றும் தற்காலிக ஓட்டுநர் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் பணியில் இருந்து விடுவிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.