Manikaraja joins dmk Pt Web
தமிழ்நாடு

தென்மண்டல தளபதியை இழந்த TTV தினகரன்.. அமைச்சரையே வீழ்த்திய மாணிக்கராஜா.. திமுகவில் இணைந்தது ஏன் ?

அதிமுக முன்னாள் அமைச்சரை அவரின் சொந்த ஊரில் வீழ்த்தி, TTV தினகரனின் தென்மண்டல தளபதியாக திகழ்ந்த மாணிக்கராஜா திமுகவில் இணைந்துள்ளார்.

Praveen Joshva L

TTV தினகரனின் வலதுகரமாக திகழ்ந்த மாணிக்கராஜாவின் முடிவு, அதிமுக - பாஜக கூட்டணியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை எதிர்த்து உருவான அமமுக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் இணைந்துள்ள சூழலில், டிடிவி தினகரனின் வலதுகரமும், அமமுகவின் தென்மண்டல பொறுப்பாளருமான கடம்பூர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்துள்ளது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ஜமீன்தாரான மாணிக்கராஜாவின் குடும்பம் கடம்பூர் சுற்றுவட்டார அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மாணிக்கராஜா & டிடிவி தினகரன்

ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்த மாணிக்கராஜா கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி செயலாளராக திகழ்ந்தார். அவருக்கும் கடம்பூர் பகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் அதிமுகவில் இருந்தபோதே எதிரும், புதிருமாக திகழ்ந்தனர்.

சசிகலாவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட மாணிக்கராஜா அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் விலகி அமமுகவை தொடங்கியதும் அக்கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் தென்மண்டல பொறுப்பாளராகவும், கழக துணை பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்ட அவர், தினகரனின் வலதுகரமாக செயல்பட்டார். கட்சியில் மாணிக்கராஜாவின் ஆதிக்கம் காரணமாகவே தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகியோர் அமமுகவில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

அப்போது கூட கட்சியை விட்டு யார் போனாலும் பரவாயில்லை. என்னுடைய உண்மையான தென்மண்டலத் தளபதி மாணிக்கராஜா மட்டும்தான் என டிடிவி தினகரனே கூறினார். அதோடு கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அப்போதைய அமைச்சர் கடம்பூர் ராஜுவின் சொந்த ஊரான சிதம்பராபுரத்தை உள்ளடங்கிய 5வது வார்டில், அதிமுக வேட்பாளரை வீழ்த்தி தனது செல்வாக்கை நிரூபித்தார். ஒரு அமைச்சர் தனது சொந்த ஊரிலேயே தோல்வியை தழுவியது அப்போது பரபரப்பான செய்தியாக பார்க்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

மேலும் கடம்பூரை உள்ளடக்கிய கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில், 10 வார்டுகளில் அமமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்ற நிலையில், அந்த ஊராட்சியை அமமுக கைப்பற்றியது. அதிமுகவில் இருந்து விலகினாலும் கடம்பூர் ஜமீன் குடும்பத்தினர் கைகாட்டுபவரே கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெறுவார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் நிருபித்தார் மாணிக்கராஜா. மேலும் தற்போது மாணிக்கராஜாவே கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த அளவு சக்திவாய்ந்த நபராக உள்ள மாணிக்கராஜா அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்துள்ளது அதிமுக கூட்டணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. அமமுக பாஜகவை உள்ளடக்கிய அதிமுக கூட்டணியில் சேர்ந்தால், கடம்பூர் பகுதியில் தனது அரசியல் எதிரியான முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கையே ஓங்கும் நிலை ஏற்படும்.

இதன் காரணமாக, அந்த கூட்டணியில் இணையவேண்டாம் என டிடிவி தினகரனிடம் மாணிக்கராஜா தொடந்து வலியுறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதனை பொருட்படுத்தாமல் டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் வேறு வழியின்றி மாணிக்கராஜா திமுக கூட்டணியில் இணைந்துள்ளதாக தெரிகிறது. அவரோடு 3 அமமுக மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்.

கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தனிப்பட்ட செல்வாக்கு பெற்றவராக கருதப்படும் மாணிக்கராஜாவின் வருகை அந்த பகுதியில் திமுகவின் பலத்தை அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.