பராசக்தி, எம்.பி மாணிக்கம் தாகூர் Pt web
தமிழ்நாடு

“பராசக்தி தோல்வி” என நண்பர்கள் சொன்னதாக ட்விட்., திமுக தலைமையைச் சீண்டும் மாணிக்கம் தாகூர்.!

கூட்டணி கட்சியான திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பராசக்தி படத்தை முன்வைத்து திமுக தலைமையைச் சீண்டும் வகையில் பதிவிட்டிருப்பது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

PT WEB

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையும், அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்திய இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து, சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. மொழிப் போராட்டம் என்பது வரலாற்றுரீதியாக திமுகவுடன் பிணைந்தது என்பதாலும், தமிழ்நாட்டில் தேசிய கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு வழிவகுத்தது என்பதாலும் அந்தப் படத்தின் மீது திமுகவினர் கொண்டிருக்கும் ஆர்வம் இயல்பானது.

பராசக்தி

கூடவே, இந்தப் படத்தை திமுக இளம் தலைவரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுடைய மகன் இன்பநிதி நிர்வகிக்கும் ரெட்ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டிருப்பதால், கட்சிசார் படமாகவே கொண்டாடுகிறார்கள் திமுகவினர். எல்லாவற்றுக்கும் மேலாக திமுகவை தீய சக்தி என்று விமர்சித்த விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனுடன் வெளியாகும் சூழல் இருந்ததால், தங்களோடு பராசக்தி படத்தை இணைத்துக்கொண்டதோடு, குடும்பம் குடும்பமாக திமுகவினர் இந்தப் படத்துக்குச் சென்று அந்தப் புகைப்படத்தைப் பகிர்வதையும், படத்தை சிலாகித்து பதிவிடுவதையும் சமூகவலைதளங்களில் பார்க்க முடிகிறது.

இந்தச் சூழலில், காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர் பராசக்தி படம் தோல்வி என்று தன் நண்பர் சொன்னதாக பதிவிட்டுள்ளார். “தமிழுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்துக்கு இனி இந்த ஜென்மத்துக்கு நீங்க ஆட்சிக்கே வர முடியாது” என்று படத்தில் மறைமுகமாக காங்கிரஸை சாடும் வகையில் உள்ள வசனத்துடன் இருக்கும் ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்திருக்கும் மாணிக்கம் தாகூர், “இந்தச் செய்தி உண்மையா... பார்த்தவர்கள் வீடியோ போட்டு விடுங்கப்பா... இந்த பராசக்தி படம் தோல்வி என நண்பர்கள் சொன்னார்கள். ஏன் உழைத்த காசை வீணாக்க வேண்டும் என நான் படம் பார்க்கவில்லை” என்றும் பதிவிட்டுள்ளார்.

எம்.பி மாணிக்கம் தாகூர்

ஏற்கெனவே திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிடக்கூடாது என்றெல்லாம் பேசிவந்த மாணிக்கம் தாகூர், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் தொடர்ந்து பேசிவருவதால், திமுகவினர் அவர் மீது கடும் எரிச்சலில் உள்ளனர். இத்தகு சூழலில், பராசக்தி குறித்த மாணிக்கம் தாகூரின் பதிவு திமுக தலைமையையே சீண்டும் வகையில் இருப்பதாக திமுகவினர் கருதுகிறார்கள். விளைவாக மாணிக்கம் தாகூருக்கு எதிரான திமுகவினர் பதிவுகளை சமூகவலைதளங்களில் பார்க்க முடிகிறது.