மாணிக்கம் தாகூர் X
தமிழ்நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்.!

திமுகவுடனான கூட்டணி முறிவுக்கு பின் காங்கிரஸின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

PT WEB

திமுக-காங்கிரஸ் உறவு சீர்குலைந்து, தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் ஏற்பட்ட உள்கட்சி அதிருப்திக்கு மத்தியில், செல்வப்பெருந்தகை தனது பதவியில் தொடரமாட்டேன் என்று தேசிய தலைமையிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து இந்த புதிய தலைவர் நியமனம் நடைமுறைக்கு வந்துள்ளது.

செய்தியாளர் - M. மீரா

தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக 6 மாதங்களாகவே திமுக-காங்கிரஸ் இடையேயான உறவில் இணக்கமான சூழல் இல்லை. காங்கிரஸில் பெரும்பாலானோர் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மேற்கொண்ட தீவிர முயற்சியினால் திமுகவும்-காங்கிரசும் கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்ததையடுத்து உடனடியாக உறவை முறித்துக்கொண்டு தவெகவுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ் கட்சி.

Selva perunthagai

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரை திமுகவினர் கடுமையாக குற்றம்சாட்டி வந்தனர். இந்தச் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைமையிடம் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி வந்தார்.

இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பே தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைய பல்வேறு வகையில் பேசிவந்தவர் மாணிக்கம் தாகூர். குறிப்பாக ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற கருத்தை முன்வைத்தவர் மாணிக்கம் தாகூர். இந்தசூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய தலைவர் நியமனம் உடனே அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக அரசியலில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.