வெள்ளியங்கிரி மலையேறியவர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலையேறியவர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு புதிய தலைமுறை
தமிழ்நாடு

கோவை வெள்ளியங்கிரி மலையேறியவர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு; 2 மாதங்களில் 6 பேர் மரணம்!

PT WEB

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலைக்கோயில். கடல் மட்டத்தில் இருந்து ஐந்தாயிரம் அடியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக்கு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

வெள்ளியங்கிரி மலைக்கோயில்

கடந்த 2 மாதங்களில் மட்டும் இக்கோயிலுக்கு செல்லும் வழியில் 5 பேர் உடல்நலக்குறைவால் உயிரிந்துள்ளனர்.

குறிப்பாக கடந்த மாதம் 25 ஆம் தேதி 24 மணிநேரத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து வனத்துறை சார்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், வெள்ளியங்கிரி கோயிலுக்கு சென்ற சீனிவாசன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசனுக்கு, வெள்ளியங்கிரி குரங்காட்டி பள்ளம் அருகே சென்றபோது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பின், சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் அடிவாரத்திற்கு கொன்டுவரப்பட்டு, மருத்துவ முகாமில் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதன்மூலம் கடந்த 2 மாதங்களில் வெள்ளியங்கிரிக்கு செல்லும்போது ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.