விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருமணத்தை மீறிய விவகாரத்தில் தங்களுக்கு இடையூறாக இருந்த 4 வயது பெண் குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூரைச் சேர்ந்த சுவாதி என்பவருக்குத் திருமணமாகி, விஷ்ணு பிரியா (4) என்ற பெண் குழந்தை உள்ளது. சுவாதி தனது கணவரான துரைப்பாண்டி (26) உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தசூழலில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிவகாசிக்குக் குடிபெயர்ந்த சுவாதி, அங்குள்ள பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த விக்னேஸ்வரன் (25) என்பவருடன் பழகியுள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியதை அடுத்து, சுவாதி தனது குழந்தை விஷ்ணு பிரியாவுடன் விக்னேஸ்வரனுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், விக்னேஸ்வரன் மற்றும் சுவாதி ஆகிய இருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் உறவிற்கும் 4 வயது குழந்தை விஷ்ணு பிரியா பெரும் இடையூறாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை நேரத்தில், தங்களுக்கு இடையூறாக இருந்த குழந்தை விஷ்ணு பிரியாவை விக்னேஸ்வரன் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை, பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த சிவகாசி கிழக்குக் காவல்நிலையப் போலீஸார், உயிரிழந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியைத் துன்புறுத்திக் கொலை செய்த விக்னேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.