கஞ்சா போதையில் வெடிகுண்டு மிரட்டல் PT
தமிழ்நாடு

சென்னை: நைட்டியுடன் வந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கங்கை அமரன் என்ற நபர் கைது!

சென்னை அண்ணா நகரில் நைட்டியுடன் வந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கங்கை அமரன் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

PT WEB

கஞ்சா போதையில் ஃபேஸ்புக் லைவ்வில் (FB Live) தோன்றிய நபர் ஒருவர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காவல் ஆணையர், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் மீது மிகவும் அவதூறாக பேசினார். மேலும், லைவ்விலேயே கஞ்சாவை பற்ற வைத்து புகைத்து, அண்ணா நகரில் தன்னை யாராவது நெருங்க வந்தால் வெடிகுண்டுகள் வீட்டில் வைத்திருப்பதாகவும், அது வெடித்து சிதறும் எனவும் அச்சுறுத்தல் விடும் படி வீடியோவில் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கங்கை அமரன்

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இந்த வீடியோவை பதிவிட்ட நபரின் செல்போன் எண்ணை வைத்து அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணா நகரில் இருக்கக்கூடிய லோட்டஸ் காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சிக்னல் காண்பித்துள்ளது.

உடனடியாக அண்ணா நகர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பந்தப்பட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்து அந்த நபரின் வீட்டை தட்டியுள்ளனர்.

போலீஸார் சென்றபோதும் வெடிகுண்டு மிரட்டல்..

போலீஸார் வீட்டை தட்டியபோது அந்த நபர் கதவை திறக்காமல் திடீரென பாக்ஸிங் கிளவுஸ் போட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதன் மீது ஏறி தொடர்ச்சியாக போலீசாருக்கு சவால் விடும் வகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் சிறிது நேரம் உள்ளே சென்ற அந்த நபர் நைட்டி அணிந்து கொண்டு ஜன்னல் வழியாக வந்து மீண்டும் மிரட்டும் தொணியில் பேசி வந்ததால் தீயணைப்புத் துறையினர் ஏணி மூலமாக மேலே ஏறி அவரை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது தவறி கீழே விழுந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபர் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், அவரது வீட்டை சோதனை செய்தபோது ஒரு மர்ம பொருள் இருப்பதை கண்டு அதனை பறிமுதல் செய்து தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையில் தெரிய வந்த தகவல்..

விசாரணையில் நைட்டியில் வந்து மிரட்டல் விடுத்த அந்த நபர் அண்ணா நகரை சேர்ந்த கங்கை அமரன் என்பதும், இவர் ஓட்டேரியை சேர்ந்த ரவுடி ஒருவரிடம் அசோசியேட்டாக இருந்து வந்ததும், அப்போது பல நபர்களை நைட்டி அமரன் பாய் என மிரட்டி மாமுல் வசூலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதே போல பல பெண்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கஞ்சா போதையில் தொடர்ச்சியாக இதுபோன்று ஆபாசமாக பேசி மிரட்டல் விடுவதையும் கங்கை அமரன் என்கிற நைட்டி அமரன் பாய் வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவர் மீது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் கஞ்சா போதையில் இதுபோன்று அவதூறாக தான் பேசி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அளவுக்கு அதிகமான கஞ்சா போதையில் இருந்ததால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கங்கை அமரனை போலீசார் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.