ஏக்னாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரே Pt web
தமிழ்நாடு

ஆபரேசன் டைகர் | உடைந்தது சிவசேனா.. உயரும் என்.டி.ஏ. பலம்!

உத்தவ் சிவசேனா தரப்பில் உள்ள 9 எம்.பி.க்களில் 6 பேர் கட்சி மாறி உள்ளனர்; எதிர் தரப்பில் இருந்து 6 பேர் இணைந்ததை அடுத்து ஷிண்டே சிவசேனா பலம் 13ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், மக்களவையில் என்.டி.ஏ-வின் பலம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Premkumar S

2019 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜகவுடன் கூட்டணியில் போட்டியிட்ட சிவசேனா, முதல்வர் பதவி தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவிலிருந்து விலகியது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மற்றும் காங்கிரஸுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி (MVA) கூட்டணியை அமைத்து ஆட்சியை பிடித்தது. இந்த முடிவை கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலர் எதிர்த்தனர். 2022-ஆம் ஆண்டு ஷிண்டே தலைமையில் பெரும்பாலான சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கிளர்ச்சி செய்து உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக செயல்பட்டனர். இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து விலகினார் உத்தவ் தாக்கரே.

உத்தவ் தாக்கரே

தொடர்ந்து, ஷிண்டே பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தார். 2023 பிப்ரவரி 17 அன்று இந்திய தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணியை அதிகாரப்பூர்வ சிவசேனாவாக அங்கீகரித்து, சிவசேனா பெயரையும் வில்-அம்பு சின்னத்தையும் அந்த அணிக்கு வழங்கியது. இந்தசூழலில் தான், உத்தவ் தலைமையிலான சிவசேனா அணி உருவாகியது.

தொடர்ந்து, 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தவ் அணி 9 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தசூழலில் தான்,  இந்தக் கட்சியில் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரே, சமீபத்தில் முக்கியமான ஒற்றுமைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில் அவருடைய 9 எம்பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக், ஓம்ராஜே நிம்பல்கர், பாவுசாஹேப் வக்சௌரே மற்றும் நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் ஆகிய 5 எம்பிக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனால், அவர்கள் சிவசேனாவில் ஐக்கியமாகலாம் எனத் தகவல் பரவியது.

ஏக்நாத் ஷிண்டே

இந்தசூழலில் தான், சஞ்சய் தினா படீல், சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக், சஞ்சய் ஹரிபாவ் ஜாதவ், பவுசாஹேப் ராஜாராம் வக்சௌரே, நாகேஷ் படீல்-அஷ்டிகர், ஓம்பிரகாஷ் ராஜே நிம்பால்கர் ஆகிய 6 உத்தவ் தரப்பு எம்.பி-கள் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்திருக்கின்றனர். இதன்மூலம், சிவசேனாவின் பலம் 13-ஆக உயர்ந்திருக்கிறது. அதேசமயம், ஷிண்டே தலைமையிலான சிவசேனா என்.டி.ஏ- கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நிலையில், மக்களவையில் என்.டி.ஏ பலம் தொடர்ந்து உயர்ந்திருக்கிறது.

சமீபத்தில், தொகுதி மறுவரையறை மசோதா, மத்திய அரசு தாக்கல் செய்திருந்த நிலையில், 3-ல் ஒரு பங்கு ஆதரவு கிடைக்காத நிலையில், தோல்வியடைந்தது. இந்தசூழலில் தான், மத்திய அரசு மீண்டும் அந்த மசோதாவை மக்களவைக்கு கொண்டு வரவிருப்பதாக கூறப்படுகிறது. மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற குறைந்தபட்சம் 362 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜகவின் ஆதரவு எம்.பி-களின் எண்ணிக்கை தற்போது 6 எம்.எல்.ஏ-கள் ஷிண்டே தலைமையிலான அணியில் இணைந்திருப்பதன் மூலம், 319-ஆக உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே, திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 20 எம்.பி-கள் அக்கட்சியில் இருந்து விலகி என்.டி.ஏ-க்கு ஆதரவளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.