Nishant & Meenatchi PT
தமிழ்நாடு

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: தேடப்பட்டுவந்த குற்றவாளி நிஷாந்த் கைது.. பிடிபட்டது எப்படி?

மதுரை தனிஷ்க் கொள்ளை விவகாரத்தின் முக்கிய குற்றவாளியான நிஷாந்த் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

PT WEB

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் ₹15 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகள் மற்றும் டாட்டூ அடையாளத்தின் மூலம் போலீசார் அவரை கண்டறிந்தனர். இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் அவரது தந்தை சுரேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், நகைகள் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

செய்தியாளர் - M.மீரா

மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் ₹15 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் நள்ளிரவில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இக்கொள்ளை தொடர்பாக, இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் குற்றவாளியான நிஷாந்தின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி என்று சொல்லப்பட்ட நிஷாந்த் என்பவரை போலிசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர். கடந்த 5 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், தருமபுரி சேஷம்பட்டியில் வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர் .

இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி

பிடிபட்டது எப்படி?

கொள்ளைக்கு பிறகு இருசக்கர வாகனம், கார், பேரூந்து என மாறி மாறி பயணம் செய்து வந்துள்ளார் நிஷாந்த். அவ்வாறு ஆம்னி பேருந்தில் பயணம் செய்தபோது டிரைவருக்கு சந்தேகம் வரவே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தருமபுரி சேஷாம்பட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளை மற்றும் கைதின் பின்னணி

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி சுமார் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 3 கிலோ வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், கொள்ளையில் ஈடுபட்டது யூடியூபர் நிஷாந்த் என்பதை கண்டறிந்தனர். கடைக்கு வாடிக்கையாளர் போல அடிக்கடி வந்து நகைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் நோட்டமிட்டுச் சென்றுள்ளார்.

யூடியூபர் மீனாட்சி கைது

கொள்ளையின்போது முகமூடி அணிந்திருந்த நபரின் கையில் இருந்த டாட்டூவை போலீஸார் முக்கிய அடையாளமாகக் கொண்டனர். முன்னதாக கடைக்கு வந்தபோது கையில் கட்டுடன் இருந்த நிஷாந்த், மற்றொரு முறை தொப்பி அணிந்து வந்த காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தனர். மூன்று காட்சிகளிலும் ஒரே மாதிரியான டாட்டூ இருந்ததால் கொள்ளையில் ஈடுபட்டது நிஷாந்த் என்பதை உறுதிசெய்தனர்.

இதையடுத்து, நிஷாந்த் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதைத் தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்த போலீஸார், அவரது தோழியும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி மற்றும் அவரது தந்தை சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது.

நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி கைது

விசாரணையில், புதிய வீடு கட்டி வந்த மீனாட்சிக்கு அதிக பணம் தேவைப்பட்டதாகவும், கடன் சுமையால் அவர் நிஷாந்திடம் உதவி கேட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்தே இருவரும் நகைக்கடையில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. கொள்ளைக்கு பயன்படுத்துவதற்காக மீனாட்சி தனது இருசக்கர வாகனத்தையும் நிஷாந்திடம் கொடுத்துள்ளார்.

தற்போது முக்கிய குற்றவாளியான நிஷாந்தும் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், நகைகள் முழுமையாக மீட்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.