மதுரையில் நகை கொள்ளைபோன டாடா நிறுவன நகைக்கடை Puthiyathalaimurai TV
தமிழ்நாடு

மதுரை நகைக்கடை கொள்ளை.. ரூட்டை மாற்றி ஹைதராபாத் விரைந்த தனிப்படை காவல்துறை!

மதுரையில் நகைக்கடையில் கிலோ கணக்கில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல் துறையினர் விசாரணை ஹைதராபாத் வரை நீண்டிருக்கிறது. கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார்?.. விசாரணை நிலவரம் என்ன?.. பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர்கள்: பிரசன்னா, சுபாஷ்

மதுரையில் பரபரப்பாக இயங்கக் கூடிய பைபாஸ் சாலையில் திறக்கப்பட்ட டாடா நிறுவனத்துக்கு சொந்தமான தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருந்தது. கதவு, பூட்டை உடைக்காமல், கட்டுமானப் பணிகள் நடைபெறும் நகைக்கடை கட்டடத்துக்குள் சாரம் வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையர் ஒருவர், கடையின் ஷோகேஸில் இருந்த 15 கிலோ அளவிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். சம்பவத்தை ஒருவர் செய்திருந்தாலும், மூவருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறது காவல் துறை. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை அடிப்படையாக வைத்து காவல்துறையின் விசாரணை நீளுகிறது.

கோப்புபடம்

அந்த வகையில், தன் அடையாளத்தை கொஞ்சம் கூட வெளிக்காட்டிக் கொள்ளாத வகையில் உடை மற்றும் ஷூ அணிந்து உள்ளே வந்த அந்த நபர், நகைகள் எங்கு இருக்கின்றன என்பதை முன்கூட்டியே அறிந்ததைப் போல சரியாக ஷோகேசில் இருந்தவற்றை மட்டும் எடுத்துச் சென்றுள்ளார். இதனால் கடையின் உள்கட்டமைப்பை தெரிந்த யாரோ ஒருவர் கொள்ளையருக்கு உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறைக்கு எழுந்திருக்கிறது. இதனாலேயே கடையின் கட்டுமானப் பணி செய்தவர்கள் தொடங்கி, பாதுகாப்பு அமைப்பை நிறுவியவர்கள், ஷோகேஸ் அமைத்தவர்கள், ப்ளம்பர், எலெக்ட்ரீஷியன், நகை விற்பனை செய்யும் கடைநிலை ஊழியர், மேலாளர் என காவல்துறையினர் விசாரணை அனைத்து கோணங்களிலும் ஊடுருவியிருக்கிறது. குறிப்பாக கடையில் அண்மையில் பணிக்குச் சேர்ந்தவர்கள், அண்மையில் பணியிலிருந்து விலகியவர்கள், கடையின் சாவியை வைத்திருந்தவர்கள், கடையைத் திறக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் என பலரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் கொள்ளைச் சம்பவம் நடக்கும் முன்பாக கடை திறந்த ஒரு வாரம் கழித்து, முகக் கவசம் அணிந்த நபர் ஒருவர் நகைக்கடைக்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் எவ்வளவு நேரம் கடைக்குள் இருந்தார்?... யாருடனெல்லாம் பேசினார்?... கடையில் இருந்தவர்கள் அவரை கவனித்தார்களா? என்பன தொடர்பான விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. கடையில் கொள்ளையடித்த நபர் ஒருவராக இருந்தாலும், அவருக்கு மேலும் இருவர் உதவியிருக்கலாம் என சந்தேகிக்கிறது தனிப்படை. இதனாலேயே சட்ட அனுமதி பெற்று சந்தேகப்படும் நபர்களின் செல்போன் அழைப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கொள்ளையர் ஸ்கூட்டியில் தப்பியதாக சொல்லப்படும் நிலையில், அந்த வாகனம், அது கடந்து சென்ற பாதை தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

நகையை கொள்ளையடித்த நபர் உடனடியாக அதை உருக்கவோ அல்லது விற்கவோ வாய்ப்பு இருப்பதால் தென் மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள நகை வியாபாரிகள், அடகுக் கடை உரிமையாளர்கள் ஆகியோரிடம் தகவல்களை சேகரித்து வருகிறது தனிப்படை. இது தவிர, கொள்ளைச் சம்பவத்தின் அலார்ம் ஏன் செயல்படவில்லை?, பாதுகாப்பு அமைப்பில் கோளாறு இருந்ததா? என்று காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். மேலும் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் அண்மைக்காலமாக நடைபெற்ற நகைக்கடை கொள்ளைச் சம்பவங்களுடன் இந்தச் சம்பவத்திற்குத் தொடர்பு உள்ளதா என்பதையும் காவல்துறையினர் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர். கொள்ளையடித்த விதம், பயன்படுத்திய வாகனம், முகமூடி அணிந்த விதம், ஷோகேஸ்களைத் திறந்த முறை உள்ளிட்ட அம்சங்களில் ஒற்றுமை உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கெனவே இதுபோன்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் பின்னணியையும் சரிபார்த்து வருகின்றனர்.

இதுவரை சேகரிக்கப்பட்ட சிசிடிவி பதிவுகள், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், கடையின் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பான தொழில்நுட்ப விவரங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் கிடைத்திருக்கக்கூடிய கைரேகைகள், கால்தடங்கள் உள்ளிட்ட தடயங்களையும் ஏற்கெனவே உள்ள குற்றப் பதிவுகளுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

இதன் மூலம் கடைக்குள் நுழைந்த நபரின் அடையாளத்தைக் கண்டறிவதுடன், அவருக்கு உதவியிருக்கக்கூடிய நபர்கள் குறித்தும் தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி முகமுடி மற்றும் உடல் முழுவதும் கருப்புதுணி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டதால் கைரேகை மற்றும் தடயம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் Ai உதவி மூலமாக உடல்தோற்றத்தின் மூலமாக அடையாளம் காணும் விசாரணையை தொடங்கியுள்ளனர்

கோப்புபடம்

கொள்ளையடித்து நகை மூட்டையோடு முகமுடி அணிந்தவாறு பதிவெண் இல்லாத பைக்கில் சுற்றி சுற்றி சென்று கொள்ளையன் தப்பியதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சிசிடிவி கேமிராக்கள் இருக்கும் பகுதியில் உள்ள புதர்களில் அங்கும் இங்கும் சென்று காவல்துறை விசாரணையை நடத்திவருகிறார்கள்.

மதுரை நேருநகர் வழியாக பதிவெண் இல்லாத பைக்கில் மாடக்குளம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் வழியாக சென்றதற்கான காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில் ரயில் நிலையம் மூலமாக கேரளாவிற்கு வடமாநிலத்திற்கோ தப்பித்துசென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில்

குற்றவாளிகளைத் தேடி ஒரு தனிப்படை ஹைதராபாத் விரைந்திருப்பது வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.