செய்தியாளர்: மணிகண்டபிரபு
தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மதுரையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், மதுரை மாநகராட்சி மண்டலம் 1ல் ஒப்பந்த தூய்மை பணியாளராக நாராயணபுரத்தைச் சேர்ந்த மணிவேல் (55) என்பவர் கடந்த 30 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று வழக்கம்போல வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்துவிட்டு மதுரை நாராயணபுரம் மந்தையம்மன் கோவில் பகுதியில் குப்பைகளை கொட்டச் சென்றுள்ளார்.
அப்போது கடும் வெயிலின் தாக்கம் காரணமாக மணிவேல் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அப்போது கீழே கிடந்த கல் அவரது பின்னந்தலையில் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த சக தூய்மை பணியாளர்கள் மதுரை மாநகராட்சி மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவர் அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.