செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (35). இவர் தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வாரிசு பணி நியமனம் மூலம் மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் நடத்துநராக பணியில் சேர்ந்துள்ளார்.
மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் திருப்புவனம் பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக முருகேஸ்வரியின் தந்தை சங்கர் நடத்துனராக பணியாற்றிய வந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் முருகேஸ்வரிக்கு வாரிசு அடிப்படையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பணி வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக திருப்பாலை பகுதியில் பேருந்து நடத்துநராக முருகேஸ்வரி பணியாற்றிய நிலையில், தற்போது மதுரை மாநகரின் பிரதான மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் மதுரை மாட்டுத்தாவணி முதல் பெரியார் பேருந்து நிலையம் வரை வந்து செல்லும் வட்ட பேருந்தில் நடத்துனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் எல்லா துறையிலும் சாதித்து வரும் சூழலில் பெண் என தயங்கி நிற்காமல் எந்தப்பணியையும் செய்தால் சாதிக்கலாம். தன்னை பெண் என ஒதுக்காமல் பேருந்து ஓட்டுநர் முதல் அதிகாரிகள் வரை ஒத்துழைப்பு தருவது நம்பிக்கையை தந்துள்ளது. அப்பா பார்த்த வேலையை தற்போது நான் செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக முருகேஸ்வரி தெரிவித்தார்.
அரசு பேருந்துகளில் பெரும்பாலும் ஆண் நடத்துநர்கள் பணியாற்றும் நிலையில், மதுரையில் முதல்முறையாக பெண் ஒருவர் பேருந்து நடத்துநராகி பணியாற்றுவது பயணத்தை இன்னும் எளிதாக்குவதாக பேருந்தில் பயணிக்கும் பெண் பயணிகள் தெரிவித்தனர். மதுரையின் பெண் நடத்துநராக பணியாற்றும் முருகேஸ்வரி மதுரை பெண்களுக்கு நிச்சயம் நல்ல முன்மாதிரியாக இருப்பார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.