கண்டதேவி கோயில் தேர்
கண்டதேவி கோயில் தேர் ட்விட்டர்
தமிழ்நாடு

கோடி ரூபாய் செலவு: ‘தெருவில் நிறுத்திவைக்கவா தேரை உருவாக்கினீர்கள்’ - தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி

PT WEB

சிவகங்கை மாவட்டம் கண்டதேவியை சேர்ந்த மகா.சிதம்பரம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ’சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் இந்த கோயிலில் திருவிழாவையொட்டி நடக்கும் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடக்கும். தற்போது இந்த கோயிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது.

கண்டதேவி கோயில்

ஆனால் இந்த தேர், கோயில் சுற்றுப்பகுதிக்கு கொண்டுவந்து வெள்ளோட்டம் பார்க்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு மனுக்களை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை திடீரென தள்ளிவைத்துள்ளதாக கூறுகின்றனர். கோயில் திருவிழா நெருங்கி வருவதால், விரைவாக தேர் வெள்ளோட்டம் நடத்தி, தயார்நிலையில் வைக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு.. தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின்போது, அறநிலையத் துறை தரப்பில், ‘கண்டதேவி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் விரைவில் நடத்தப்படும். அதன்பின் 2020, ஏப்ரல் மாதம் நடக்கும் கோயில் திருவிழாவில் தேரோட்டம் நடப்பதற்கான அனைத்துப் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன’ என்று கூறப்பட்டது. அதனைப் பதிவுசெய்து கடந்த 2019ஆம் ஆண்டே டிசம்பர் மாதம், வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில் மனுவில் கூறப்பட்டத்தை நிறைவேற்றாததை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ’தேர் தயாராகி விட்டதா’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’தேர் தயாராக உள்ளது. பல பிரிவினர் பிரச்னை செய்வதால் சட்டஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமாதான கூட்டம் நடத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். பதற்றமான சூழல் இருப்பதால் காலதாமதம் ஆகிறது’ என வாதிடப்பட்டது.

இதையும் படிக்க: பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு.. 21 பேர் காயம்!

இதனைத்தொடர்ந்து நீதிபதி, ‘சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் பல பிரிவினருக்கிடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்கிற சூழல் வருத்தத்திற்குரியது. பிரச்னைக்குரிய பிரிவினர்களை அழைத்து அரசு ஒரு கூட்டம்கூட நடத்த முடியாதா? பலகோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள். அரசின் நடவடிக்கைகளில் ஒரு சதவீதம்கூட திருப்தியில்லை. மாநில அரசால் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியவில்லையென்றால் மத்திய அரசு படையைக் கொண்டு நடத்த உத்தரவிடலாமா?

மதுரை உயர்நீதிமன்றம்

அனைத்து பிரிவு மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது என அரசு கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். மாநில அரசால் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியாவிட்டால், மத்திய துணை ராணுவ உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, வரும் 17ஆம் தேதி தேர் வெள்ளோட்டத்தை நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிக்க: சென்னை: அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை... இதனால் ஏற்படும் பிரச்னை என்ன?