அஜித்குமார், சீமான், மதுரை HC x page
தமிழ்நாடு

போராட்டம் நடத்த அனுமதி கோரிய நாம் தமிழர் கட்சி.. அட்வைஸ் சொன்ன நீதிமன்றம்!

மனுதாரர்கள் தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரி புதிதாக மனு அளிக்கவும், காவல்துறையினர் அதனை 24 மணி நேரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

PT WEB

அஜித்குமார் மரண விவகாரத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி கோரி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பாக நீதி கேட்டும், கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், கண்டன ஆர்ப்பாட்டத்தை ஜூலை 8ஆம் தேதி திருப்புவனம் சந்தை திடலில் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். அதற்கு அனுமதி வழங்கக்கோரி மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தோம். ஆனால் அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். எனவே அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

சீமான் Seeman

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "8ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் எவ்விதமான போராட்டமும் நடத்தப்படவில்லை. இன்று போராட்டம் நடத்த அனுமதி கோரிய நிலையில், வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காண்பித்து காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், "8ஆம் தேதி கண்டதேவி கோவில் தேரோட்டம் என்பதால் அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய சூழல் இருந்ததால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது, அதோடு அன்றைய தினம் சந்தையில் அப்பகுதியில் நடைபெறும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் "போலீஸ் வேண்டுமானால் கண்டதேவி கோவிலுக்கு பாதுகாப்புக்கு போகட்டும். நான் போராட்டத்தில் ஈடுபடுவேன்" என சீமான் youtube ஒன்றில் பேசியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "ஏற்கெனவே 3ஆம் தேதி சந்தை திடல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதனை மறைத்து நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் அனுமதி வழங்கவில்லை என குறிப்பிட்டு முறையீடு செய்ததாலேயே, அவசர வழக்காக அன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஆனால் 3ஆம் தேதி கட்சியின் தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக 5 நாட்களுக்குள்ளாக மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கோருவதை எப்படி ஏற்பது? பொறுப்புள்ள குடிமகன்களாக கண்டதேவி கோவில் திருவிழாவிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது அவசியம் என்பதை உணரவில்லையா” என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, அனுமதியின்றி 3ஆம் தேதி போராட்டம் நடத்தியது தொடர்பாக ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? என காவல்துறையிடம் கேள்வி எழுப்பினர். மேலும், சட்டத்தின் முன் ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை அனைவரும் சமமானவர்கள்தான் என கருத்து தெரிவித்தார்.

மதுரை உயர்நீதிமன்றம்

மேலும், "போராடுவது அரசியல் கட்சியினரின் உரிமை என்றாலும், ஒரே இடத்தில் தொடர்ச்சியாக போராடுவது அப்பகுதி மக்களை எவ்வளவு பாதிக்கும்? என்பதை உணர வேண்டும்" என குறிப்பிட்டார். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தி மனுதாரர்கள் தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரி புதிதாக மனு அளிக்கவும், காவல்துறையினர் அதனை 24 மணி நேரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.