நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 32- வது பட்டமளிப்பு விழா கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, ஜீன்ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டத்தை வாங்க மறுத்து துணைவேந்தர் சந்திரசேகரிடம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சம்பந்தப்பட்ட மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனுவில், "நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா 13.08.2025 அன்று நடந்தது.
அந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கவிருந்த பட்டத்தை ஜீன்ஜோசப் என்ற மாணவி பெற மறுத்து, துணை வேந்தரிடம் பெற்றுக் கொண்டார். பல்கலைகழகச் சட்டப்படி, வேந்தரே பல்கலைக் கழக்த்தின் தலைவர், துணை வேந்தர் என்பவர் வேந்தர் இல்லாத போது மட்டுமே பட்டத்தை வழங்க முடியும். எனவே, வேந்தரிடம் பட்டம் பெற மறுத்தது சட்ட மீறல். மேலும் அந்த மாணவி பட்டமளிப்பு விழாவின் போது அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் கருத்துகளையும் தெரிவித்திருக்கிறார். அந்த சந்திப்பில், தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாத ஆளுநரிடம் நான் ஏன் பட்டம் வாங்க வேண்டும் எனவும் அந்த மாணவி கூறி இருக்கிறார்.
பட்டமளிப்பு விழா அரசியல் போராட்டத்திற்கான களம் அல்ல. எனவே, மாணவி துணை வேந்தரிடம் இருந்து பெற்ற பட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், இந்த வழக்கு முடியும் வரை மாணவியின் பட்டம் செல்லுபடியாகும் தன்மைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒதுக்க வேண்டும்” எனக் கூறினர்.
தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் மாண்பை காக்க வேண்டும் என்றும் இளைய தலைமுறைகளுக்கு உரிய வழிகாட்ட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், பல்கலைக்கழக விதியில், இதுபோன்று செயல்பட்டவர்கள் மீது துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா? என மனுதாரரும், பல்கலைக்கழக வழக்கறிஞரும் பதில்மனு செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.