முதல்வர் விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கரூர் கூட்டநெரிசல் | விஜய் அரசுக்கு பின்னடைவு.. பணி உத்தரவை ரத்துசெய்த உயர்நீதிமன்றம்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தவெக அரசு வழங்கிய அரசுப் பணியை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.

Prakash J

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜயைக் காண ரசிகர்கள் கூடியிருந்த நிலையில், அக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே, தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வரான விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கரூர் சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் எனச் செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் பலத்த விமர்சனம் எழுந்தது.

கரூர் கூட்ட நெரிசல் விபத்து

இதையடுத்து, இந்த நேரடியாக அரசு வேலை வழங்கும் முடிவுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. போட்டித் தேர்வு மூலம் மட்டுமே பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், மனிதாபிமான அடிப்படையில் விதிகளை மீறி வேலை வழங்குவது சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுதாரர் சீனி அகமது குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதன் முதற்கட்ட விசாரணையின்போது, “கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவி தேவைதானே? அரசு பணி வழங்குவதில் என்ன தவறு” என அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கருணை அடிப்படையில் பணி வழங்கினால் சாட்சிகளைக் கலைக்கும் வாய்ப்பாக அமையும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்களில் இறந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடும் தரவில்லை; அரசுப் பணியும் வழங்கப்படவில்லை” என வாதிட்டார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை

இதையடுத்து நீதிபதிகள், “கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு தடையில்லை; ஆனால், பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும். ஆனால், அந்த பணியின் நிரந்தர தன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது” என உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், தவெக அரசு வழங்கிய அரசுப் பணியை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. “விதி14 (சட்டத்தின் முன் சமத்துவ உரிமை) விதி 16 (அரசு வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை) ஆகிய விதிகள் இந்த விவகாரத்தில் அரசுப்பணி வழங்குவதில் மீறப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு பணி வழங்கினால், பலரும் இதுபோல அரசு பணி கேட்க வாய்ப்பாக அமைந்துவிடும். கருணைப்பணி பெற்ற பலர் பணி நிரந்தரம் பெற காத்திருக்கும் சூழலில், இவ்வாறு அரசுப்பணி வழங்குவது முறையானதாக இருக்காது. திறன் வளர் பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவலாமே? அது இவ்வாறு பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும். அரசுத்தரப்பில் 32 பேரின் குடும்பத்திற்கு சாதாரணப் பணியே வழங்குவதாக் கூறுவதை ஏற்க இயலாது. எப்பணியும் சாதாரணப் பணி அல்ல. அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் முக்கிய பணியே” எனக் கூறி அரசுப் பணி உத்தரவை ரத்து செய்துள்ளது.