சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் கொடூரமான முறையில் உயிரிழந்தனர். காவல்துறையினர் தாக்கியதாலேயே இருவரும் பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரடப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 105 சாட்சியங்களில் பெரும்பாலான சாட்சியங்கள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு எதிராகவே இருந்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் ஜாமீனில் விடுவிக்கக் கோரிய மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.